அறம் செய்காவற்கு அயோத்தியில் தோன்றினான் - தருமம் அழியாது காப்பதற்காக அயோத்தி மாநகரத்தில் அவதரித்தவனான இராமபிரான்; இறைஞ்ச அன்னவர் ஏத்தினர் ஏவ - (வசிட்டரையும் விசுவாமித்திரரையும் இவ்வாறு) வணங்க. (உடனே) அவர்கள் (அவனை) வாழ்த்தி. (இவ்வாசனத்தில் வீற்றிரு) என நியமிக்க; ஓர் நிறைஞ்ச பூந்தவிசு ஏறி - ஒப்பற்றதான பூவேலைகள் நிறைந்த ஆசனம் ஒன்றின்மேல் ஏறியமர்ந்து; நிழல்கள் போல் புறம்செய் தம்பியருள் பொலிந்தான் - தனது நிழல்களைப்போல் தன்னை விடாமல் நிற்கின்ற தம்பியர் மூவரோடும் பொலிந்து நின்றான். “அயோத்தியில் தோன்றியது அறஞ்செய் காவற்கே” என அறுதியிட்டவாறு. இராவணனை அழித்தல் முதலிய அனைத்தும் அறங்காக்கவே ஆதல் தெளிவாம். “அறந்தலை நிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து. உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்து உக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப் பிறந்தனன்” (கம்ப. 5885) என்பதிலும் அறந்தலை நிறுத்தலையே முதற்கடமையாகக் குறிப்பிட்டுள்ளமை காண்க. 44 தயரதனும் மண்டபத்திற்கு வந்து அமர்தல் |