உலகு சூழ்ந்து ஒன்றுபுரி கோலொடு தனித்திகிரி உய்ப்பான்- உலகம் அனைத்தும் சுற்றிவந்து (அறம்) ஒன்றையே புரிகின்ற செங்கோலோடு ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தையும் செலுத்தும் தசரத வேந்தன்;துன்றுபுரி கோதைஎழில் கண்டு - அடர்ந்த கூந்தலையுடைய சீதையின் அழகினை நோக்கி; என்றும். உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் - எக்காலத்தும் நான். உலகேழையும் ஆள்கின்ற அரசாட்சியைப் பெற்றுள்ளேன் ஆனாலும்; இன்று திரு எய்தியது இது என்ன வயம்? என்றான் - இன்றைக்குத் தான் திருமகள் என்னையடைந்தாள்;யான் அடைந்தவற்றுள் எல்லாம் இது எத்தகைய (உயர்) வெற்றி! என்று உவந்தான். வயம் - வெற்றி. திரு - திருமகள்; தெய்வத்தன்மை. நான் உலகேழையும் வெற்றிகொண்டது மனிதத் தன்மையதே. இன்று தான் அதற்குத் தெய்வத்தன்மை கிட்டியது எனினுமாம். கவிஞர் பிரான். வசிட்டர். தசரதன் முதலிய ஒவ்வோர் உள்ளத்துள்ளும் நுழைந்து அவ்வவர் மகிழ்வினை. அவ்வவர் இயல்புக்கேற்பக் கண்டு காட்டுவது மிகவும் போற்றற் பாலது. பல செல்வங்களையும் முன்பு பெற்றேன்; இன்றுதான் செல்வத்தின் செல்வத்தைப் பெற்றேன்; பூரணச் செல்வத்தைப் பெற்றேன் என்று தயரதச் சக்கரவர்த்தி பூரித்தான் என்க. 33 |