எய்யலில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்- இலக்கையடைய வில்லை வளைத்ததையும். அதனைமுறித்ததையும் (பலர் வாயிலாக) உரைக்கக் கேட்டதும்; மெய்விளைவு இடத்தும் - உண்மை முடிவாகத் தெரிதலால்; முதல் ஐயம் விடல் உற்றாள் - (கன்னி மாடத்தில் கண்டவனோ வேறு ஒருவனோ வில் முறித்தவன்) என்று தெருவிற்கண்ட முதற்காட்சி காரணமாக எழுந்த ஐயத்தை ஓரளவு நீக்கிவிட்ட பிராட்டி; ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் - தலைவனாகிய இராமனை அன்று முதல் தன் அகமாகிய மனத்திலே நிலை நிறுத்தியிருந்த வடிவத்தால் கண்டுகளித்து வந்தவள். வெளியேயும் (அவன் வடிவத்தைக் கண்ணாரக் காண) ; கைவளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள் - (பெண்மையின் இயல்பான நாணந் தடுத்தலால். நேராக நோக்காது) கைவளையல்களைச் செப்பம் செய்யும் காரணத்தைக் கொண்டு. கடைக் கண்ணாலே அவனைத் தரிசித்து அவனே இவன் என உணர்ந்து மகிழ்ந்தாள். நீலமாலை கூற்றால். முன்பே ஓரளவு போக்கியிருந்த ஐயத்தை மீண்டும் முழுதும் போக்கிடத் துணிந்தாள் என்க. பெண்மைக்குத் தனிப்பெருமை சேர்க்கும் நாணத்தைப் பெண்ணரசியாகிய பிராட்டிக்கும் சேர்த்து அதனைமேலும் பெருமை பெற வைத்துள்ள பெருந்திறம் காண்க. வரிசிலை யண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தி (கம்ப. 516) யவர் ஆதலின். அகத்தில் இருந்த ஐயனைத் தொடும் அளவு அருகில் இருந்தும். நேராகத் திரும்பிப் பார்க்க இயலாமல் தடுத்த நாணத்தை வெல்ல. கைவளையைத் திருத்தும் முகமாகத் தலைசாய்க்காமல் கண்சாய்த்துக் கண்ட நேர்த்தியைச் சொல்வலைப் படுத்தியுள்ள திறம் எண்ணி எண்ணி மகிழத் தக்கது. காலில் தைத்த முள்ளைப் பிடுங்கும் முகமாகச் சகுந்தலை. துஷ்யந்தனைத் திரும்பப் பார்த்த நிகழ்ச்சியைக் காளிதாசன் கட்டுரைத்தமை நினைவுகூர்க. 37 |