பக்கம் எண் :

810பால காண்டம்  

“சடை     முடிச்சூழி  விண்முடி  தொட” எனப் பொருள் இயைபுக்
கேற்ப மாற்றிக் கூட்டுக. “ஊழிக்கடை முடிவில் தனி  உமை  கேள்வன்”
என்பதிலும்.  “திரி  உமை கேள்வன்” என்பதே  பொருள்  சிறப்பதால்.
அப்பாடமே  கொள்ளப்பட்டது.  தோன்றிய   முறைக்கேற்ப.  ஆகாயம்.
கால்.   அனல்.   புனல்.   நிலம்  எனக்  கூறலே   முறை   யாயினும்
செய்யுளாதலின் பிறழக் கூறப் பெற்றது.  ஊழி  முடிவில்.  சிவபெருமான்
சர்வ  சங்காரனாய். ஊழிக் கூத்தாடுகையில்  ஐம்  பூதங்களும்  அழியும்;
அப்போது  அம்மைகாண நடமாடுவான்  என்பது  பற்றி.  “ஆழிப்புனல்.
எரி.  கால்.  நிலம்.  ஆகாயமும்  அழியும் ஊழிக் கடை  முடிவில் திரி
உமைகேள்வனை   ஒப்ப”   என்றார்.  புயம்   திக்கடைய   விரியலும்.
சடைவிண்    தொடுதலும்.     அயலே     வெண்மதி    தோன்றலும்
சிவபிரானுக்கும் பரசுராமனுக்கும் சிலேடையாயின.                  11
 

1274.அயிர் துற்றிய கடல் மா நிலம்
   அடைய. தனி படரும்
செயிர் சுற்றிய படையான். அடல்
   மற மன்னவர் திலகன்.
உயிர் உற்றது ஒர் மரம் ஆம் என.
   ஓர் ஆயிரம் உயர்தோள்
வயிரப் பணை துணிய. தொடு
   வடி வாய் மழு உடையான்;
 

அயிர் துற்றிய கடல் மாநிலம் அடைய-மணல்கள் செறிந்த கடல்
சூழ்ந்த  நிலவுலகம்  முழுவதும்;  தனி  படரும்  -  (யார்  துணையும்
இன்றி)  தனித்தே செல்ல வல்ல; செயிர் சுற்றிய படையான் - வலிமை
மிக்க   சேனையையுடையவனும்;   அடல்  மறமன்னவர்  திலகன் -
வீரம்மிக்க  மன்னர்களுக்கு  எல்லாம்  திலகம்  போன்றவனும்  (ஆகிய
கார்த்தவீரியர்ச்சுனன்);உயிர் உற்றது ஒர் மரம் ஆம் என - உயிரோடு
கூடிய  ஒரு  மரம் போல் எதிர் நிற்க. (அவனது); ஓர் ஆயிரம்  உயர்
தோள்வயிரப்  பணை  துணிய
- ஓராயிரம் எண்ணிக்கையினையுடைய
உயர்ந்த   தோள்களாகிய   வயிரம்   பாய்ந்த    கிளைகள்   எல்லாம்
துண்டுபடுமாறு;  தொடு  வடிவாய்  மழு  உடையான் - எடுத்த கூரிய
நுனியுடைய பரசு என்ற போர்க் கருவியை உடையவனும் -
 

கார்த்த    வீரியார்ச்சுனன் இராவணனை வென்று சிறை  வைத்தவன்
ஆதலின்.  “அடல்  மற  மன்னர்  திலகன்”  எனப்பட்டான்.  ஆயிரங்
கைகளையுடைய      அவன்      பரசுராமனின்      மழுவாயுதத்தால்
கொல்லப்பட்டான்.”  ஆயிரம்  தடக்கையான்  நின்  ஐந்நான்கு  கரமும்
பற்றி.  வாய்  வழி  குருதி  பொங்கக்  குத்தி  வான்சிறையின்  வைத்த
தூயவன்   வயிரத்   தோள்கள்  துணித்தவன்   தொலைந்த   மாற்றம்
நீயறிந்திலையோ?”  (கம்ப.  5203) என்னும்  சீதைக்  கூற்றால்  இதனை
உணரலாம். மரமும் ஓரறிவு பெற்ற உயிர் ஆதலால்.  “உயிர்  உற்றதொர்
மரமாம்”  என்பதற்கு ஆறறிவு உயிர் பெற்றதொர்  மரம்போல  என்பது
பொருளாகக்     கொள்க.     நூற்றுக்கணக்கான    கிளைகளையுடைய
மரம்போலக்   கைகளையுடையவன்   ஆதலின்  மரம்   எனப்பட்டான்.
மரத்தின் கிளைகளைக் கோடாரியால்  வெட்டிச்  சரிப்பதுபோல.  அவன்
தோள்கள்.    பரசுராமனின்    கோடரியால்    வெட்டிச்சரிக்கப்பட்டன
வாதலின்  ‘ஓராயிரம்  உயர்தோள்  வயிரப்  பணை  துணிய’  என்றார்.
பணை - கிளை.                                             12