அரைசன் - தசரதச் சக்கரவர்த்தி; அவன் இடை வந்து - பரசுராமனிடத்திலே வந்து; இனிது ஆராதனை புரிவான் - இனிய முறையிலே அவனுக்கு அதிதி பூசை புரிந்து; விரை செய் முடி படிமேல் உற - மணங்கமழும் (தனது) தலை. பூமியிலே படுமாறு; அடிமேல் உற விழவும் - (பரசுராமனின்) திருவடிகளிலே வீழ்ந்து வணங்கிய அளவில்; அனையான் - அப் பரசுராமன்; கரை சென்றிலன் - (தனது கோபக் கடலுக்கு ஒரு) கரை காணாதவனாய்; நெடு முடிவின் கனல் கால்வான் - யுக முடிவில் எழும் வடவைத் தீயின் வெப்பத்தை உமிழ்பவனாய்; முரைசின் குரல்பட - முரைசின் குரலுக்கு ஒப்பாக; வீரனது எதிர் நின்று இவை மொழிவான் - இராமபிரானுக்கு எதிரில் நின்று பின்வருமாறு கூறலானான். “கரை சென்றிலன்” என்றதற்கேற்ப. சினம் கடல் ஆயிற்று. ஏகதேச உருவகம். தயரதன் பரசுராமனின் கொடுமையை எண்ணி. அருமை மைந்தன் இராமனுக்கு அவனால் தீங்கேதும் நிகழ்ந்துவிடக் கூடாவண்ணம் அவன் சினம் தணிக்க. ஆவனவெல்லாம் புரியவும். அவன் சினம் தணிவதற்கு மாறாக. கரை காணா அளவிற்கு மிகுந்தது என்பார். “கரை சென்றிலன்;நெடுமுடிவின் கனல் கால்வான்” என்றார். “காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்” (திருக். 305) ஆதலின். அச்சினம் அவனுக்கு நெடுமுடிவைத் தந்தது எனும் பொருளும் தோன்ற” நெடுமுடிவின் கனல் கால்வான்” என்றார். 17 பரசுராமன் சினவுரை |