புறன் நின்றவர்- அருகிலிருப்பவர்கள்; இகழும்படி - இகழ்ந்து கூறும்படி; நடுவின் தலை புராணத்திறன் நின்று - நடுவு நிலையில் பொருந்தாத வகையில் நின்று; உயர் வலி என்? - உயர்கின்ற வலிமை (தனக்கும் உலகுக்கும்) என்ன பயனைத் தருவதாம்? (தராது); அது ஒர் அறிவின் தகு செயலோ? - அது ஒப்பற்ற அறிவிற்குத் தக்க செயல் எனப்படுமோ? (படாது); அறன் நின்றதன் நிலை நின்று - (உலகில்) (நிலைத்த) அறம் நிற்கின்ற நிலை எதுவோ அதன் வழியிலே நிலைத்து நின்று; உயர் புகழ் ஒன்றுவது அன்றோ - உயர்ந்த புகழுடன் பொருந்துவது அன்றோ; மறன் என்பது - வலிமை (வீரம்) என்று சிறப்பித்துக் கூறப்படுவது?; மறவோய் - வீரனே!: இது - (சரணமடைந்த) எம்மை யழிக்க நினைக்கும் இச்செய்கை அறமுமன்று நீதியுமன்று: வலியென்பது வலியோ? வலிமையென்று கூறத்தக்க வலிமை யாகிடுமா? (என்று கேட்டான் தசரதன்). எது வலிமை? எது அறிவு? எது உயர் புகழ்? எது மறம்? எனும் நான்கு வினாக்கட்கு இப்பாடலில் அழகிய விளக்கம் அளித்துள்ளார். நீதியினின்றும் வழுவாது அயலிருப்பார் இகழ இயலாதவாறு உயர்ந்து நிற்பது வலிமை: நீதி வழுவாது. அயலார் புகழுமாறு உயரத்தக்க வழிகாட்டுவது அறிவு: அறம் எவ்வழிச் செல்கின்றதோ அவ்வழியில் நிலைத்து நிற்பது உயர் புகழ்: அறவழியில் நின்று உயர்புகழ் எய்துமாறு புரியும் வலிய செயல்கள் மறம். சரண் என்று அபயம் புக்காரை ஒழிக்க முந்துவது வலிமையும் அன்று: தக்க அறிவும் அன்று: உயர்புகழும் அன்று: அறமும் அன்று: மறமும் அன்று எனத் தயரதன் பரசுராமனிடம் வேண்டியவாறாம். நடுவு - ஒருபாற் கோடாத நீதியறம். “சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பாற் கோடாமை சான்றோர்க்கு அணி” (திருக்.118) யாக இருக்க. சினம் ஏதுவாக. ‘அரசரொடு போர் இடேன்’ என்ற வாய்மையையும். சரணடைந்தாரைக் காக்காது அழிக்க நினைக்கும் பெரும் பாவத்தையும் புரியக் கருதும் பரசுராமன் அறத்தின்பால் நிலைத்து நிற்காதவன் ஆனான். “சென்றவிடத்தால் செலவிடா தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது” (திருக். 422) அறிவின் செயல் ஆதலால். நன்றின் பால் உய்க்காத இவன் செயல். “அறிவின் தகு செயலோ” எனக் கேட்கப்பட்டது. 22 |