மண்ணிய மணிநிற வண்ண!- “கழுவித் தூய்மை செய்யப் பெற்ற நீல மணியின் நிறமுடைய இராமனே!; வண்துழாய்க் கண்ணிய! - அழகிய துழாய் மாலையணிந்தவனே!; யாவர்க்கும் களை கண் ஆகிய புண்ணிய! - (மூவுலகங்களிலும் வாழ்கின்ற) அனைவர்க்கும் புகல் இடமாகிற புண்ணியனே!;எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக! - நீ. கருதி வந்துள்ள பொருள்கள் எல்லாம் (கருதியவாறே) இனிதே நிறைவேறுவனவாகுக; விடை எனத் தொழுது போயினான் - யான் விடை பெறுகின்றேன்” என்று கூறி வணங்கிச் சென்றான் (பரசுராமன்). நீல மணி வண்ணமும் பைந்துழாய்க் கண்ணியும் உடைய நீ சரணாகதி வத்சலன் ஆகிய பரம்பொருளே. இனி. உலகு உன்னால் நலம் அனைத்தும் பெறும். நான் பெற வேண்டியது விடை எனப் பரசுராமன் விடை பெற்றனன் என்க. மண்ணுதல்: கழுவுதல். நீராட்டுதல். “மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை” (குறுந். 292) “மண்ணி வாரா அளவை” (புறம். 50). களைகண்: புகலிடம். சரணாகதி நல்குதல். 40 இராமன் தந்தையைத் தொழுது துயர்போக்கல் |