‘ஐய! - ஐயனே!; மூதாதை ஆணையின் - உன்னுடைய பாட்டன் (இட்டுள்ள அன்புக்) கட்டளையின் வண்ணம்; நிற்காணிய விழைவது ஓர் கருத்தன் - உன்னைக் காண விரும்புகின்ற கருத்துடையவன் (எனத் தெரிகிறது); ஆதலால் - ஆகவே; கேணியில் வளை முரல் கேகயம் புக - நீர்நிலைகளிலே (ஓயாது) சங்குகள் ஒலித்தற்கு இடமான (நீர்வளமிக்க) கேகய நாட்டிற்குச் செல்ல; பூண் இயல் மொய்ம்பினாய்!; - அணிகள் விளங்கும் மார்பினையுடைய பரதனே!; போதி என்றனன் - புறப்படுவாயாக! என்று கூறினான் (தசரதன்). பரதனின் தாய் மாமன் யுதாசித்து. தன் தந்தை தான் பரதனைக் காண அழைத்து வருமாறு இட்ட கட்டளைப்படி அயோத்தி வர. அவர்கள் திருமணத்திற்காக மிதிலை சென்றிருப்பதையறிந்து மிதிலைக்குச் சென்று. அவர்களோடேயே அயோத்தி வந்து. பரதனை அழைத்துச் செல்லக் காத்திருந்தனன் எனும் முதல் நூற் கதைப்பகுதி இங்கு விளக்கம் பெற உதவும். மூதாதை - பாட்டன்; மாதா மகன். மொய்ம்பு - வலிமை. ஆகுபெயராய் மார்பினைக் குறித்தது. மங்கல நாதமாகிய சங்கொலி நீர்நிலைகள் எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் மங்கல நாடு கேகயம் என்பதாம். 47 |