பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்849

38.இராகவன் கதையில். ஒரு கவிதன்னில்
   ஏக பாதத்தினை உரைப்போர்.
பராவ அரும் மலரோன் உலகினி. அவனும்
   பல் முறை வழுத்த. வீற்றிருந்து.
புராதன மறையும் அண்டர் பொன் பதமும்
   பொன்றும் நாள் அதனினும். பொன்றா
அரா-அணை அமலன் உலகு எனும் பரம
   பதத்தினை அடைகுவர் அன்றே.

 

இராகவன்   - இராமன்;  ஏக பாதம் -  ஒரு  வரி;  பராவரும் -
பரவுதற்கு  அரிய; மலரோன் - பிரமன்; வழுத்த - துதிக்க; புராதன -
பழமையான; அண்டர்  பொன்பதம்  -  தேவருலகம்;  பொன்றும் -
அழியும்; அரா அணை - பாம்புப் படுக்கை; அமலன் - திருமால்.
  

39.இனைய நல் காதை முற்றும்
   எழுதினோர். வியந்தோர். கற்றோர்.
அனையதுதன்னைச் சொல்வோர்க்கு
   அரும் பொருள் கொடுத்துக் கேட்டோர்.
கனை கடல் புடவி மீது
   காவலர்க்கு அரசுஆய் வாழ்ந்து.
வினையம் அது அறுத்து. மேல் ஆம்
   விண்ணவன் பதத்தில் சேர்வார்.

 

இனைய     - இத்தகைய; காதை - கதை;  முற்றும் -  முழுவதும்;
அரும்பொருள்
-  அரிய  செல்வம்;  கனைகடல்  - ஒலிக்கும் கடல்;
புடவி  மீது
-  உலகத்தின்  மேல்;  காவலர் - மன்னர்; வினையம் -
தீவினை; விண்ணவர் பதம் - பேரின்ப வீடு.
  

40.நாடிய பொருள் கைகூடும்;
   ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்;
   வேரி அம் கமலை நோக்கும்;-
நீடிய அரக்கர் சேனை
   நீறுபட்டு அழிய. வாகை
சூடிய சிலை இராமன்
   தோள் வலி கூறுவோர்க்கே.

 

நாடிய   - விரும்பிய; ஞானம் - மெய்யறிவு; வீடு - பேரின்ப வீடு;
வேரி  
-  மணம்; கமலை - மலர்மகள்; நீடிய - நீண்ட; நீறு - புழுதி;
வாகை
- வெற்றிமாலை; சிலை - வில்.