பக்கம் எண் :

850பால காண்டம்  

41.வான் வளம் சுரக்க! நீதி
   மனு நெறிமுறை எந் நாளும்
தான் வளர்ந்திடுக! நல்லோர்
   தம் கிளை தழைத்து வாழ்க!
தேன் வளர்ந்து அறாத மாலைத்
   தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல்
   இடையறாது ஒளிர்க. எங்கும்!
 

வான்     -  வானம் (மழை);  கிளை - சுற்றம்; அறாத - நீங்காத;
தெசரத  ராமன்  
-  தசரத  ராமன்  (மோனை கருதி ‘தெச’ என்றார்);
இடை அறாது
- இடைவிடாமல்; ஒளிர்க - விளங்குக.
 

                                               பாயிரம்
 

42.எறிகடல் உலகம்தன்னுள்
   இன்தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக
   மொழிந்தனென்; மொழிந்த என்சொல்
சிறுமையும். சிலை இராமன்
   கதைவழிச் செறிதல் தன்னால்.
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம்
   அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே.
 

எறிகடல் - ஒலிக்கும் கடல்; இன்றமிழ் - இனிய தமிழ்; முறுவல் -
புன்சிரிப்பு; மொழிந்த - கூறிய; சிறுமை - தாழ்வு; செறிந்த - சேர்ந்த;
அமிழ்தம்
- அமுதம்; ஒத்து - போல.                      9-1
 

                                       2 நாட்டுப் படலம்
 

43.காளையர் சேறுதன்னைக்
   கலந்து. உடன் மிதித்து. நட்ட
தாள்களும் கழுநீர் நாறும்;
   தடக் கையும் அதுவே நாறும்;
ஆளையும் சீறிப் பீறி.
   அணி மலர்க் கமுகில் பாய்ந்த
வாளையும். பாளை நாறும்;
   வயல்களும் அதுவே நாறும்.
 

காளையர்  -  காளை போன்றவர் (மழவர்); கழுநீர் - செங்கழு நீர்
மலர்;  தடம்  கை - பெரிய கை; அணிமலர் கமுகு - அழகிய மலரை
உடைய கமுகு.                                        14-1