பக்கம் எண் :

864பால காண்டம்  

                                    9 அகலிகைப் படலம்
 
 

99.‘இனைய சோலை மற்று யாது?’ என
   இராகவன் வினவ.
வினை எலாம் அற நோற்றவன்
   விளம்புவான்; ‘மேல்நாள்
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே.
   காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள்.
   இவண்’ என வலித்தான்.

 
 

வினை எலாம் அற நோற்றவன்- விசுவாமித்திரன்; வலித்தான் -
தெளிவாகச் சொன்னான்.

காசிபன்     மனைவி  திதி  என்பவள் தன் மக்களான அசுரர்கள்
தேவர்களால்  அடியுண்டு மடிந்து  போனதால் மிகத் துயரம் அடைந்து
இந்திரனைக்  கொல்லவும்.   மூவுலகையும்  ஆளவும்  ஒரு  மகனைப்
பெறுமாறு  தன்  கணவனிடம்   அனுமதி  பெற்றுப்  பல காலம் தவம்
புரிந்த இடம் இது என்று விசுவாமித்திரன் கூறினான்.              3-1
   

100.‘அண்ட கோளகைக்கு அப்புறத்து.
   என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி. ஓர்
   விஞ்சையர் கோதை.
புண்டரீக மென் பதத்தியைப்
   புகழ்ந்தனள்; புகழ.
வண்டு அறா மது மாலிகை
   கொடுத்தனள் மகிழ்ந்து.
 

நீள்பதம் - வைகுண்டம்.

ஒரு     வித்தியாதரப் பெண். செந்தாமரையில் உள்ள திருமகளைப்
பாடித் துதித்தாள். அது கேட்டு மகிழ்ந்த இலக்குமி   மனமுவந்து தனது
பூமாலையை அவள் கையில் கொடுத்தாள் என்பது.               3-2
 

101.‘அன்ன மாலையை யாழிடைப்
   பிணித்து. அயன் உலகம்.
கன்னி மீடலும். கசட்டுறு
   முனி எதிர் காணா.