3. கைகேயி சூழ்வினைப் படலம் கூனியினால் மனம் திரிந்த கைகேயி தன் அலங்காரத்தை அழித்துக் கொண்டு தரையில் கிடந்தாள். இராமன் முடிசூட இருப்பதை அவளுக்குத் தெரிவிக்க வந்த தயரதன் அவளை எடுத்து அவளது துயரத்திற்குக் காரணம் கேட்டான். அவள் அவனிடம் இரு வரங்களைக் கேட்க. அவனும் தருவேன் என்றான். கைகேயி இரு வரங்களைக் கேட்டாள். தயரதன் பெருந்துயர் உற்றான். அவள் காலில் விழுந்து ஒரு வரத்தைப் பெற்று, இராமனைக் காட்டுக்கு அனுப்பும் மற்றொரு வரத்தைக் கேட்காதிருக்குமாறு வேண்டினான். அவள் அதற்கு இணங்க வில்லை. அவன் மண்ணில் விழுந்து புலம்பினான். அவள் வரம் தர மறுத்தால் உயிர்விடுவதாகச் சொன்னாள். அவன் வரத்தை நல்கி மூர்ச்சை அடைந்தான். அவள் செயல் முற்றித் துயின்றாள். இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. இராமன் முடிசூடுவதைக் குறித்து நகர மக்கள் மகிழ்ந்தனர். முடிசூட்டு மண்டபத்துள் அரசர்கள், அந்தணர்கள் முதலியோர் நிறைந்தனர். வசிட்டன் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தான். மன்னனை அழைத்துவரச் சுமந்திரனை அனுப்பினான். அவனிடம் இராமனை அழைத்துவருமாறு சொன்னாள் கைகேயி. அரண்மனைக்குச் செல்லும் இராமனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர். இராமன் அரண்மனையில் அரசனைக் காணாமல் கைகேயியின் அரண்மனை புகுந்தான். அவன் எதிரே கைகேயி வர, அவளை வணங்கினான். அவள், இராமன் காடு செல்ல வேண்டும் என்பது மன்னன் கட்டளை என்றாள். இராமன் மகிழ்ச்சியோடு அவளிடம் விடைபெற்றுக் கோசலையின் மாளிகைக்குச் சென்றான். இப் படலத்தில் இடம் பெறும் விடியற் கால நிகழ்ச்சிகள் பற்றிய பாடல்கள் தற்குறிப்பேற்றஅணி நயம் நிறைந்து கற்பனை வளம்செறிந்து உயர்ந்த கவிதைகளாய்த் திகழ்கின்றன. கைகேயி தன் கோலம் அழித்தல் 1491. | கூனி போன பின், குல மலர்க் குப்பைநின்று இழிந்தாள்; சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை, |
|