“உன்னிய - என்னால் நினைக்கப்பட்ட ; பெறல் அரும்உறுதி ஒன்று உளது - பெறுதற்கு அரிய உறுதிப் பொருள் ஒன்று உள்ளது ; என் உணர்வுஅனைய நீர் - (அதனை) என் உணர்வை ஒத்த நீவிர் ; இனிது கேட்டிரால் -நன்றாகக் கேட்பீர்களாக” என்றான். உறுதி - ஈண்டு உறுதியைப் பயக்கும் பொருளைக் குறித்தது. அஃதாவதுஇராமனுக்கு முடிசூட்டித் தான் வீடுபேறு அடைதற்குரிய நெறியில் செல்லத் தயரதன் நினைத்ததைக்குறித்தது. யான் உணர்தற்குரியதை நீங்கள் உணர்ந்து கூறும் தன்மையுடையீர் என்னும் கருத்தினால்‘என் உணர்வு அனைய நீர்’ என்றான். 12 | 1326. | ‘வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர், செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே, வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால், ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன். |
வெய்யவன் குலம் முதல் வேந்தர் - சூரிய குலத்தில் தோன்றிய முதன்மையான அரசர்களாகிய ; மேலவர் - முன்னோர்களின் ; செய்கையின் - ஒழுக்கத்திலிருந்து ; ஒருமுறை திறம்பல் இன்றியே - ஒருசிறிதும் வழுவுதல் இல்லாமல் ; வையம் - உலகத்தை ; ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு - அறுபதினாயிரம் ஆண்டுகள் ; நுங்கள் மாட்சியால் - உங்களதுநற்குண நற்செயல்களாகிய பேருதவியால் ; என் புயத்திடைத் தாங்கினேன் - என்தோள்களில் சுமந்தேன். செய்கை - ஒழுக்கம். முறையும் என்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தால்தொக்கது. அரசாட்சி பாரம் ஆதலின் தோள்களில் தாங்குவதாகக் கூறப்பட்டது. 13 | 1327. | ‘கன்னியர்க்கு அமைவரும் கற்பின், மா நிலம்- தன்னை இத் தகைதரத் தருமம் கைதர, மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் ; என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். |
‘கன்னியர்க்கு - பெண்களுக்கு ; அமைவரும் - பொருந்தும் ; கற்பின் - கற்பினை அவர்கள் காப்பது போல ; மாநிலம் தன்னை - பெரிய உலகத்தை ; இத் கைதர - அறக்கடவுள்உதவியதனால் ; மன் உயிர்க்கு - நிலைபெற்ற உயிர்களுக்கு ; உறுவதேசெய்து வைகினேன் - பொருந்தும் நன்மைகளையே இந்நாள்வரை செய்து வாழ்ந்தேன் ; என் உயிர்க்கு உறுவதும் - இனி, என் உயிர்க்குப் பொருந்தும் நன்மையையும்; செய்ய எண்ணினேன் - புரிவதற்கு நினைந்தேன்.’ கன்னியர் - பெண்டிர் என்னும் பொருளில் வந்தது. கைப்பிடித்தான் ஒருவனுக்கே உரியராய் இருத்தல் பெண்டிர்க்குக் கற்புடைமை ஆகும். அதுபோல |