‘மைந்தரை இன்மையின் - பிள்ளைகள் இல்லாமையால் ; வரம்பு இல் காலமும் - எல்லையற்ற காலமும் ; நொந்தனென் - (மனம்) வருந்தினேன் ; என் நோவை நீக்குவான் - என் வருத்தத்தை நீக்குவதற்கு; இராமன் வந்தனன் - இராமன் எனக்கு மகனாகப் பிறந்தான்; இனி அவன் வருந்த- இனி அந்த இராமன் அரசாட்சியைத் தாங்கித் துன்பம் உற; யான் பிழைத்துஉய்ந்தனென் போவதோர் உறுதி - யான் தப்பி ஈடேறிப் போவதான ஒரு நன்மையைப் பெற ; எண்ணினேன் - நினைந்தேன்.’ இராமனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு யான் துறவு மேற்கொள்ளஎண்ணினேன் என்பது கருத்து. இராமன் எனற் பெயர் மகிழச் செய்பவன் என்னும் பொருளது. ஆதலின்என் நோவை நீக்க என் தவத்தினாலன்றித் தானே வந்து தோன்றினான் என்பான் ‘இராமன் வந்தனன்’ என்று கூறினான். ‘அவன் வருந்த யான் பிழைத்துய்ந்தனன் போவதோர் உறுதிஎண்ணினேன்’ என்பது இராமன் நாடு துறந்து காடு சென்று துன்புற, யான் இவ்வுடலைத் துறந்து துறக்கம்போவதாகிய ஓர் உறுதியை எண்ணினேன் என்று மேல் வினையைக் குறிப்பாகக் காட்டுவதாக அமைந்தது.நீக்குவான் ‘வான்’ ஈற்று எதிர்கால வினையெச்சம். 26 | 1340. | “இறந்திலன் செருக் களத்து இராமன் தாதை ; தான், அறம்தலை நிரம்ப, மூப்பு அடைந்த பின்னரும், துறந்திலன்” என்பது ஓர் சொல் உண்டானபின், பிறந்திலென் என்பதின் பிறிது உண்டாகுமோ? |
இராமன் தாதை - இராமனுக்குத் தந்தையான தயரதன் ; செருக்களத்து இறந்திலன் - போர்க்களத்தில் உயிர் விட்டானில்லை ; தான்மூப்பு அடைந்த பின்னரும் - தான் கிழத்தனத்தை அடைந்த பிறகும் ; அறம் தலைநிரம்ப - அறம் முழுதும் நிறையும்படி ; துறந்திலன் - துறவு நெறியைமேற்கொண்டானில்லை ; என்பது ஓர் சொல் - என்பதாகிய ஒரு பழிச்சொல் ; உண்டான பின் - தோன்றிய பின்பு ; பிறந்திலென் என்பதின் -பிறந்திலேன் என்பதினும் ; பிறிது உண்டாகுமோ - வேறு உண்டோ? முனைமுகத்து விழுப்புண் பட்டு வீரசுவர்க்கம் அடைவது மன்னர்க்குச் சிறப்பு ; அது வாய்க்காது போயின், மூப்புப் பருவத்தில் துறந்து அதன் பயன் கோடல்தக்கதாம். இவ்விரண்டும் வாய்க்காது போயின் பிறந்தும் பயனில்லை ; பழிச்சொல்உண்டாகும் என்பது வற்புறுத்தப்பட்டது. பிறவிப் பயன் அடையாதார் பிறந்தும் பிறவாதாரே ஆவார்.‘இராமன் தாதை’ என்பது பிள்ளையைப் பெற்ற பின்னரும் துறந்திலன் என்னும் குறிப்பினை உட்கொண்டது. 27 |