| வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி, ‘நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு?’ என்றாள். |
‘மௌலி புனைந்திலன் - மகுடம் சூடவில்லை; குஞ்சி - தலைமுடி; மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் - அபிடேகமாகிய தூய நதிகளின் தண்ணீரால் நனையப்பெற்றான்இல்லை; என்கொல்?’ - என்ன காரணம்; என்னும் ஐயத்தாள் -என்கின்ற சந்தேகத்தை உடையவளாக இருக்கின்ற கோசலைத்தாயின்; நளின பாதம் -தாமரையாகிய அடிகளை; வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும் - பொன்னாற்செய்யப்பெற்ற வீரக்கழல் அணிந்த இராமன் வணங்கிய அளவில்; குழைந்து வாழ்த்தி - மனம் உருகி ஆசி கூறி; ‘நினைந்தது என்?’ - சக்கரவர்த்தி எண்ணிய செயல்என்னாயிற்று; நெடுமுடி புனைதற்கு இடையூறு உண்டோ? - உயர்ந்த மகுடத்தைச் சூடுதற்குஏதேனும் தடை உளதோ;’ என்றாள் - என்று கேட்டாள். குஞ்சி - ஆடவர் தலைமுடி. மகனை முதல் வாழ்த்தினாள், பின்னர் வினவினாள் என்பதுஅறியற்பாலது. 2 கலிவிருத்தம் 1608. | மங்கை அம் மொழி கூறலும், மானவன் செங் கை கூப்பி, ‘நின் காதல் திரு மகன், பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே, துங்க மா முடி சூடுகின்றான்’ என்றான். |
மங்கை - கோசலை; அம்மொழி கூறலும் - ‘நெடுமுடி புனைதற்கு இடையூறுஉண்டோ?’ என்ற அந்த வார்த்தையைச் சொல்லிய உடன்; மானவன் - பெருமை குறையாதஇராமன்; செங்கை கூப்பி - (தாயைச்) சிவந்த கைகளைக் கூப்பித் தொழுது; ‘நின்காதல் திருமகன் - உன்னுடைய அன்பிற்குரிய சிறந்த புதல்வன்; பங்கம் இல் குணத்து எம்பி - குற்றமற்ற குணநலன்களை உடைய என் தம்பி; பரதனே -; துங்க மாமுடி சூடுகின்றான்’ - பரிசுத்தமான சிறந்த முடியைச் சூடப்போகிறான்;’ என்றான் -. தாயிடத்துக் கூறுகின்றான் ஆதலின், அவள் வேற்றுமை இன்றிஉணர வேண்டி முன்னதாகவே ‘நின்காதல் திருமகன்’ ‘பங்கம் இல் குணத்து எம்பி’ என்றெல்லாம்இராமன் எடுத்துக் கூறினான். பரதன் என்ற சொல்லுக்கு நாட்டைப் பரிப்பவன்’ தாங்குபவன்என்பது பொருள். அப்பெயர்க்கேற்ப அவன் ஆட்சி உரிமை எய்தியது உணர்ந்து இன்புறற்குரியது. 3 |