1609. | ‘முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின் நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்; குறைவு இலன்’ எனக் கூறினள் - நால்வர்க்கும் மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள். |
நால்வர்க்கும் - இராமலக்குமண பரத சத்துருக்கனர்களாகிய நால்வரிடத்தும்; மறு இல் அன்பினில் - குற்றம் அற்ற அன்பு செலுத்துவதில்; வேற்றுமை மாற்றினாள் -வேறுபாட்டை நீக்கி ஒரே தன்மையளாய் உள்ள கோசலை; ‘முறைமை அன்று என்பது ஒன்று உண்டு- மூத்தவன் இருக்கும் போது இளையவன் அரசாளுவது முறைமை அன்று என்ற ஒரு குறை உண்டு; மும்மையின்நிறை குணத்தவன் - மூன்று மடங்கு எல்லாரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன்; நின்னினும் நல்லன் - உன்னையும்விட நல்லவன்; குறைவு இலன் - கல்வி, இளமை, வீரம், குணம் முதலிய யாவற்றாலும் யாதொரு குறைவும் இல்லாதவன்;’ எனக்கூறினாள் - என்று சொன்னாள். கைகேயியின் அன்பு பெரிதும் இராமனுக்கும், கோசலையின் அன்பு பெரிதும் பரதனுக்கும்அமைந்துள்ளதை இக்காவிய ஓட்டத்தில் காணலாகும். ‘நின்னினும் நல்லன்’ என்பதைப் பின் வரும்எண்ணில் கோடி இராமர்கள் என்னினும், அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ’ என்ற (10181.) கோசலைக் கூற்றை ஒப்பு நோக்கி உணர்க. 4 1610. | என்று, பின்னரும், ‘ மன்னவன் ஏவியது அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்; நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து, ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள். |
என்று - என்று கூறி; பின்னரும் - பிறகும்; ‘ மகனே! - இராமகனே; மன்னவன் ஏவியது - சக்கரவர்த்தி ஆணையிட்டது எதுவாயினும்; அன்றுஎனாமை - நீதியன்று என்று மறுக்காமல் அப்படியே ஏற்றுச் செய்வது; உனக்கு அறன் -உனக்குரிய தருமம் ஆகும்; நன்று - நல்லது; நீ - ; நும்பிக்கு - உன்தம்பியாகிய பரதனுக்கு; நானிலம் கொடுத்து - இவ்வுலகை ஆளும் உரிமையைத் தந்து; (அவனுடன்) ஊழி பல - பல நெடுங்காலங்கள்; ஒன்றி வாழுதி - ஒன்றுபட்டுவாழ்வாயாக;’ என்றாள்-. தந்தை சொல்லை மகன் மறுக்கவும் கூடுதல் உலகியல், ஆயினும் அரசன் ஆணை மீறமுடியாதது.ஆகையால் அதுபற்றித் ‘தந்தை ஏவியது’ என்று கூறாமல், |