பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 207

1651.தா இல் முனிவன் புகல,
     தளராநின்ற மன்னன்,
நாவில் நஞ்சம் உடைய
     நங்கை தன்னை நோக்கி,
‘பாவி! நீயே, "வெங் கான்
     படர்வாய்" என்று, என் உயிரை
ஏவினாயோ? அவனும்
     ஏகினானோ?' என்றான்.

     தா இல் முனிவன் புகல - குற்றமற்ற வசிட்டமுனிவன்இவ்வாறு
சொல்ல;  தளராநின்ற மன்னன் - வருத்தத்தால் தளர்கின்ற  சக்கரவர்த்தி;
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி - நாக்கிலே விடம்
உடைய பெண்ணாகியகைகேயியைப் பார்த்து;  ‘பாவி!  நீ என் உயிரை
வெங்கான் படர்வாய்' என்று-
பாவியாகிய நீ என் உயிராகிய இராமனைக்
கொடிய காட்டிற்குச் செல்க என்று;  ஏவினாயோ! -கட்டளையிட்டாயோ;
அவனும் ஏகினானோ?- அந்த இராமனும் காட்டிற்குச்சென்றுவிட்டானோ;'
என்றான்-.

     "நாகம் எனும் கொடியாள்தன் நாவின் வந்த சோகவிடம்"  என
முன்னும் (1505.) வந்துள்ளதை‘நாவில் நஞ்சம் உடைய நங்கை'
என்பதனுடன் ஒப்பிடுக.  ‘நீயே'  ‘ஏ' காரம் பிரிநிலை.  ‘ஓ'காரம் வினாப்
பொருட்டு.                                                   46

1652.‘கண்டேன் நெஞ்சம்; கனிவாய்க்
     கனி வாய் விடம் நான் நெடு நாள்
உண்டேன்; அதனால், நீ என்
     உயிரை முதலோடு உண்டாய்;
பண்டே, எரிமுன், உன்னை,
     பாவி! தேவி ஆகக்
கொண்டேன் அல்லேன்; வேறு ஓர்
     கூற்றம் தேடிக் கொண்டேன்.

     ‘பாவி! - பாவியே;  நெஞ்சம் கண்டேன் - உன் மனக்கருத்தை
இப்போது அறிந்தேன்;  நான் கனிவாய்க் கனி வாய் விடம் நெடுநாள்
உண்டேன் -
நான் அன்போடு பழம்போன்ற உன்னுடைய  வாயிலிருந்த
விடத்தை நீண்ட நாள் சாப்பிட்டுவிட்டேன்; அதனால்-; நீ என் உயிரை
முதலோடு உண்டாய் -
நீ என்னுடைய உயிரை அடியோடு
சாப்பிட்டுவிட்டாய்;  உன்னைப் பண்டே எரிமுன் தேவியாகக்
கொண்டேன் அல்லேன் -
உன்னை முன்பு வேள்வித் தீயின்முன்
மனைவியாக (நான்) கொள்ளவில்லை;  வேறு ஓர் கூற்றம்தேடிக்