| | பொன் - தேர் அரசே! தமியேன் புகழே! உயிரே! உன்னைப் பெற்றேன்; அருமை அறிவேன்; பிழையேன்! பிழையேன்!' என்றான். |
உன்னின் பிரியவற்றே உலகம் எனினும் - (இராமா!) உன்னிடத்திருந்து உலகம் பிரியும் வல்லமை உடையதாயினும்; வானே வருந்தாது எனினும் - தேவர்களும் மனம்வருந்தார் ஆனாலும்; பொன்தேர் அரசே! - பொன் மயமான தேரில் ஏறி வரும் அரசனே; தமியேன் புகழே! - துணையில்லாத எனது புகழே; உயிரே! - என் உயிரே; உன்னைப் பெற்றேன், அருமை அறிவேன் - உன்னைப் பெற்று உன் அருமையை அறிந்துள்ளேன்; இனி யான் எற்றே பகர்வேன்- இனி மேல் நான் என்ன சொல்லுவேன்; என்னே-; பிழையேன் பிழையேன் - பிழைக்க மாட்டேன்; என்றான்- வானும் உலகமும் உன் பிரிவை ஏற்கும் வல்லமை உடையதாயினும் என்னால் அது இயலாதுஎன்றான். ‘பிழையேன், பிழையேன்' புலம்பலில் வந்த அடுக்கு. 60 | 1666. | ‘அள்ளற் பள்ளப் புனல் சூழ் அகல் மா நிலமும், அரசும், கொள்ளக் குறையா நிதியின் குவையும், முதலா எவையும், கள்ளக் கைகேசிக்கே உதவி, புகழ் கைக்கொண்ட வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும்! மாய்க்கும்! என்றான். | அள்ளல் பள்ளப் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் - குழைந்த சேறுடைய பள்ளங்கள் நிறைந்த நீரால் சூழப்பெற்ற அகன்ற கோசல நாடும் ஆட்சியும்; கொள்ளக் குறையாநிதியின் குவையும் - கொடுக்கக் குறைவுபடாத செல்வக் குவியலும்; முதலா எவையும்-மற்றுள்ள எல்லாவற்றையும்; கள்ளக் கைகேசிக்கே உதவி - வஞ்சகமுள்ள கைகேசிக்குக்கொடுத்து; புகழ் கைக்கொண்ட- புகழைப் பெற்றுக்கொண்ட; வள்ளல்தனம் -உன்னுடைய உதாரகுணம்; என் உயிரை மாய்க்கும் மாய்க்கும்' - என் உயிரைப் போக்கடிக்கவல்லதாய் நின்றது; என்றான்-. இராமனது வண்மைக் குணம் வெளிப்பட்டு, அது மேலும் தயரதன் மனத்தைப் பலம் இழக்கச்செய்கிறபடி. ‘மாய்க்கும், மாய்க்கும்' புலம்பல் அடுக்கு. ‘ஏ' காரம் தேற்றம். 61 |