1714. | ‘ கோதை வரி வில் குமரற் கொடுத்த நில மாதை ஒருவர் புணர்வாராம்? வஞ்சித்த பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்குமே, சீதை பிரியினும் தீராத் திரு?’ என்பார். |
‘கோதை வரிவி்ல் குமரன் கொடுத்த நிலமாதை - வெற்றி மாலை சூடிய கட்டமைந்தகோதண்டத்தை உடைய இராமனுக்குப் பேரவையில் கொடுக்கப் பெற்ற நிலமகளை; ஒருவர்புணர்வார்- வேறு ஒருவர் (பரதன்) கூடுவார்; (அப்படிக் கூடினால்); சீதை பிரியினும் -சீதாபிராட்டி காடு சென்றாலும்; தீராத் திரு - தானும் காடு செல்லாமல்தங்கிவிட்ட செல்வமகள்; வஞ்சித்த பேதை - வஞ்சனை செய்த கைகேயியின்; சிறுவனை- மகனாகிய பரதனை; பார்த்துப் பின் நிற்குமே?’ - பார்த்துக்கொண்டுஏற்றுக்கொண்டு நிற்பாளா;’ என்பார்-. ‘ஆம்’ உரையசை. ‘சீதை பிரியினும் தீராத் திரு’ என்பது சீதை இந்நகரத்தை விட்டுப்பிரிந்த அளவில் செல்வ மகளும் இந்நகரை விட்டுப் போய்விடுவாள் என்பது குறித்தது. 109 1715. | உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார், “செந்தாமரைத் தடங் கண் செல்வி அருள் நோக்கம் அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ!’ என்பார். |
‘உந்தாது - தூண்டப்படாமல்; நெய்வார்த்து உதவாது - நெய்ஊற்றி உதவிசெய்யாமல்; கால் எறிய - காற்று வீசுதலால்; நந்தா விளக்கின் - (நடுங்குகின்ற) கெடாத விளக்குப் போல; நடுங்குகின்ற நங்கைமார் - துடிக்கின்றமகளிர்; ‘செந்தாமரைத் தடங்கண் - (இராமரை) செந்தாமரை மலர் போன்ற விசாலமானகண்களாற் பெறும்; செல்வி அருள் நோக்கம்- தக்க பருவத்தே விளையும் அருள்பார்வையை; பிரிதுமோ? - பிரியப் போகிறோமோ; அந்தோ! ஆ! விதியே! ஓ!’என்பார் -. நந்தா விளக்காயினும் தூண்டுதல், நெய்வார்த்தல் முதலிய உதவியில்லை மாறாகக் காற்று எறிகிறது; எனவே அணையாமலும் இருக்கிறது, நடுங்கவும் எப்போது அணையுமோ என்பது போல் உள்ளது. மகளிர் உயிர்விடவும் செய்யாது வாழவும் இயலாமல் அவலத்தில் துடிக்கின்றனர் என்பதாம். ‘அந்தோ! ஆ! ஓ’ என்பன இரக்கக் குறிப்புகள். 110 |