பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 251

நீங்க; போரில் வந்தோரை எல்லாம் - என்னோடு போர்க்கண்
வந்தவர்களைஎல்லாம்; அவிப்பானும் - அழிப்பதற்காகவும்;  அவித்து -
அழித்து;  அவர் ஆக்கையை-
அவர்களின் உடல்களை;  அண்டம்
முற்றக்
குவிப்பானும்- உலகஅண்டமெல்லாம் நிறையக் குவிப்பதற்காகவும்;
எனக்கு ஒரு கோவினை - எனக்கு ஒப்பற்றதலைவனாக உள்ள
இராமனுக்கு; கொற்ற மௌலி - வெற்றி பொருந்திய மகுடத்தை;
கவிப்பானும் - சூட்டுதற்காகவும்; நின்றேன் - (இப்போது ஆயத்தமாக)
நிற்கின்றேன்; இது காக்குநர் காமின்’ - இதைத் தடுத்துக் காத்துக்கொள்ளக்
கூடியவர்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்;’  என்றான்.

     இது கைகேயியையும் அவளைச் சார்ந்தோரையும் நோக்கிக் கூறியதாகக்
கொள்க. ‘காக்குநர்- படர்க்கை. காமின் - முன்னிலை இட வழுவமைதி. 117

1723.விண் நாட்டவர், மண்ணவர்,
     விஞ்சையர், நாகர், மற்றும்
எண் நாட்டவர், யாவரும்
     நிற்க; ஓர் மூவர் ஆகி,
மண் நாட்டுநர், காட்டுநர்,
     வீட்டுநர் வந்தபோதும்,
பெண் நாட்டம் ஒட்டேன். இனிப்
     பேர் உலகத்துள்’ என்னா.

     ‘விண் நாட்டவர் - தேவர் உலகத்துள்ளவர்; மண்ணவர் -
மண்னுலகில் உள்ளவர்; விஞ்சையர் - வித்தியாதரர்;  நாகர் - பாதல
உலகத்தில் வசிப்போர்; மற்றும் - வேறாக;  எண் நாட்டவர் -
எண்ணப்படும்  நாட்டில் உள்ளவர்; யாவரும் - அனைவரும்; நிற்க -
கிடக்கட்டும்; (அவரினும் மேம்பட்டு) ஓர் மூவர்ஆகி - மூன்று பேராக
இருந்து;  மண் நாட்டுநர் - உலகத்தை நிலை நிறுத்திக்காக்கின்ற
திருமாலும்;  காட்டுநர் - படைக்கின்ற பிரமனும்;  வீட்டுநர் - அழிக்கின்ற
உருத்திரனும் ஆகிய மூவர் (துணையாக);  வந்த போதும் - வந்தாலும்;
இனிப் பேர் உலகத்துள் பெண் நாட்டம் - இனி இவ்வுலகில் பெண்ணின்
மனக்கருத்துக்கு;  ஒட்டேன் - உடன்படேன்;  என்னா - என்று சொல்லி.

     யார் துணையாக வரினும் கைகேயியின் மனக்கருத்து  நிறைவேற
விடமாட்டேன் என்பான் இவ்வாறுகூறினான். நாட்டுதல் - நிலைபெறுத்தல்-
நிலைநிறுத்தல் அதாவது காத்தலாம். “உலகம்யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலை பெறுத்தலும்,  நீக்கலும்” என்பது  (1.) காண்க.                 118