1724. | காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி, ஞாலத்தவர் கோ மகன், அந் நகரத்து நாப்பண், மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை வேலைத் திரிகின்றதுபோல், திரிகின்ற வேலை,- |
ஞாலத்தவர் கோ மகன் - சக்கரவர்த்தியின் இளைய மகனாகிய இலக்குவன்; காலைக் கதிரோன் - காலை இள ஞாயிறு; நடு உற்றது ஓர் வெம்மை காட்டி -உச்சிக்கு வந்தாற்போன்ற ஒரு வெப்பக் கடுமையைக் காட்டி; முந்தை - முன்காலத்தில்; மாலைச் சிகரத் தனி மந்தர மேரு - ஒழுங்கான குடுமிகளை உடைய ஒப்பற்ற மந்தர மலை; வேலைத் திரிகின்றது போல - கடலின் கண் (மத்தாக) சுழல்கின்றது போல; அந்நகரத்து நாப்பண் - அவ் அயோத்தி நகர நடுவில்; திரிகின்ற வேலை -சுழன்று வருகின்ற நேரத்தில். பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கிக் கடைந்த போது ‘மந்தரமாலைசுழன்றதுபோல’ என அதனை இலக்குவன் திரிகின்றமைக்கு உவமையாக்கினார். 119 இலக்குமணன் நாணொலி கேட்டு இராமன் வருதல் 1725. | வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மி, தேற்றத் தெளியாது அயர் சிற்றவைபால் இருந்தான், ஆற்றல் துணைத் தம்பிதன் வில் - புயல், அண்ட கோளம் கீற்று ஒத்து உடைய, படும் நாண் உரும் ஏறு கேளா. |
வேற்றுக் கொடியாள் - மனம் வேறுபட்ட கொடியவளான கைகேயி; விளைவித்தவினைக்கு - உண்டாக்கிய துன்பச் செயலுக்கு; விம்மி - கலங்கி; தேற்ற - ஆறுதல் கூறவும்;தெளியாது - மனம் சமாதானம் அடையாமல்; அயர் - சோர்கின்ற; சிற்றவைபால்இருந்தான் - சுமித்திரையாகிய சிற்றன்னையிடத்தே இருந்தவனாகிய இராமன்; ஆற்றல்- வலியிற் சிறந்த; துணைத் தம்பிதன்- தனக்குத் துணையாகிய இலக்குவனது; வில்புயல் - வில் என்கிற மேகத் |