செல்வதால் தங்களுக்கு) எதிர்காலத்தில் வரும் நன்மையும் விரும்பாதவர்களாய்; தேவர்உள்ளமும் வெந்தனர் - (இராமனது மரவுரிக் கோலம் கண்டும்) தேவர்களும் உள்ளம் வெந்துபோனார்கள். தேவர்களுக்காகவே இராமன் மரவுரி தரித்துக் காடு சென்றானாகத் தேவர்களே அக்கோலம் கண்டு தரியாதவர்களாக மனம் வெந்தனர் ஆயின் மற்றவர் நிலையைச்சொல்வது எவ்வாறு? என்றாராம். 183 | 1789. | ‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய வஞ்சனை கண்டபின், வகிர்ந்து நீங்கலா நெஞ்சினும் வலிது உயிர்; நினைப்பது என் சில? நஞ்சினும் வலிய, நம் நலம்’ என்றார் - சிலர். |
சிலர்-; ‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய - மை போன்ற உடம்பினை உடையஇந்த எழிலையுடைய இராமனுக்குப் பொருந்திய; வஞ்சனை - பொல்லாங்கை; கண்டபின் - பார்த்த பிறகும்; வகிர்ந்து நீங்கலா நெஞ்சினும் - பிளவுண்டு போகாத மனத்தைக்காட்டிலும்; உயிர் வலிது - நம் உயிர் வலிமையாக இருக்கிறது; சில நினைப்பது என்? - வேறு சில நினைப்பதனால் பயன் என்ன; நம் நலம் - நமது நன்மை; நஞ்சினும் வலிய’ - விடத்தினும் வலியதாயிராநின்றது;’ என்றார்-. இராமனுக்கு நிகழ்ந்த இக் கொடுமை கண்ட பிறகும், நம்நெஞ்சு பிளக்க வில்லை. உயிர் போகவில்லை, நமது நலம் அழகாயிருந்தது என்று தம்மைத்தாமே நொந்துகொள்கின்றனர். 184 | 1790. | ‘ “மண்கொடு வரும்” என, வழி இருந்தது, யாம், எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் கண்கொடு பிறத்தலும் கடை’ என்றார் - சிலர். | சிலர்-; ‘மண் கொடு வரும்’ என - இராமன் அரசாட்சி கொண்டு முடி புனைந்துவருவான் என (அக்காட்சி காண); யாம் வழியிருந்தது - வழியில் காத்திருந்தது; எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? - நினைக்கக் கொடிய வெப்பமுள்ள காட்டில்செல்லுதலைப் பார்ப்பதற்கோ?; பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் - பெண்கொடுந்தொழில் செய்யப் பொருந்திய நாட்டில்; கண் கொடு பிறத்தலும் கடை -(அந்தக் கொடுமைகளைக் காண) கண் உடையவர்களாகிப் பிறத்தலும் கீழ்த்தரமானது;’ என்றார் -. ‘கண் செய்த பாவம் கடலிற் பெரிது’ என்று (1706.)முண்சொல்லியதை ஒத்தது இது. 185 |