| 1800. | நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த் துளி - தன் நெடுந் தாரைகள் தளத்தின் வீழ்தலால், மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி, மாடமும் பொன் நெடுங் கண் குழித்து, அழுவ போன்றவே. |
நல் நெடுங் கண்களின் நான் நீர்த்துளிதன்ற - (மேல்மாடத்திருந்து இராமனைக்கண்ட மகளிர்) நல்ல நீண்ட கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளியினது; நெடுந் தாரைகள்- நீண்ட நீர்ப்பெருக்கு; தளத்தின் வீழ்தலால்- மேல் தளத்திலிருந்து கீழேவிழுகின்ற தன்மையால்; மாடமும்- மாளிகையும்; மன் நெடுங் குமரன் மாட்டு அழுங்கி- அரச குமாரனிடத்தில் வருந்தி; பொன் நெடுங் கண் குழித்து - அழகிய பெரிய இடத்தைக் குழி செய்து; அழுவ போன்றவே - அழுகின்றன போல்வன. மேல் மாடியிலிருந்து காணும் மகளிர் கண்ணீர்த் தாரை மாடித் தளத்திலிருந்து கீழே விழும் காட்சி மாளிகையே அழுவதுபோல் என்பது தற்குறிப் பேற்றயிணயாம்- கண் - இடம் (விழி) சிலேடை. 195 | 1801. | மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப் புக்க இடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு உக்கனர்; உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர் - துக்கம் நின்று அறிவினைச் சூறையாடவே. |
துக்கம் நின்று - துயரம் நிலைத்து நின்று; அறிவினைச் சூறையாட- அறிவைக் கொள்ளையிட்டுச் செல்ல (அதனால் உணர்வு மயங்கி); மாதர் - தாய்மார்கள்; மக்களை மறந்தனர் - தங்கள் பிள்ளைகளை மறந்துபோனார்கள்; புதல்வர் - பிள்ளைகள்; தாயரைப் புக்க இடம் அறிந்திலர் - தாய்மார்கள்புகுந்த இடத்தை அறியாதவர் ஆயினர்; பூசல் இட்டு - அழுது ஆர்ப்பரித்து; உக்கனர் - மனம் உடைந்து; உயங்கினர் - வாடி; உருகி - கரைந்து; சோர்ந்தனர் - சோர்வடைந்தார்கள். பிள்ளைகள் தாயரைத் தேடும் இயல்புடையவர் ஆதலின், தேடிக் கிடையாதவழி பூசல் இட்டுஉயங்கி உருகினர் என்க. இதற்குக் காரணம் தாயர் பிள்ளைகளை மறந்தமையே. அவர்கள் துக்கம்நின்று அறிவு கொள்ளை போனதால் மறந்தனர். எனவே, இராமன் காடு புகுவது நகரமாந்தரைப்படுத்திய விதம் அறிவித்தவாறு - ‘ஏ’ காரம் ஈற்றசை. 196 | 1802. | காமரம் கனிந்தெனக் கனிந்த மென் மொழி மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால், தே மரு நறுங் குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன - தவள மாடமே. |
|