பக்கம் எண் :

296அயோத்தியா காண்டம்

1807.நிழல் பிரிந்தன குடை; நெடுங் கண் ஏழையர்
குழல் பிரிந்தன மலர்; குமரர் தாள் இணை
கழல் பிரிந்தன; சினக் காமன் வாளியும்
அழல் பிரிந்தன; துணை பிரிந்த, அன்றிலே.

     குடை- குடைகள்; நிழல் பிரிந்தன- நிழல் செய்தலைக் கைவிட்டன;
நெடுங்கண் ஏழையர்  குழல் - நீண்ட கண்ணை  உடைய  மகளிர்
கூந்தல்கள்;  மலர்பிரிந்தன - மலர் சூடுதலை விட்டன;  குமரர்தாள்
இணை கழல்  பிரிந்தன -
வீரர்களது  அடிகள் கழல் அணிதலைக்
கைவிட்டன;  சினக் காமன் வாளியும் - கோபம் உடைய மன்மதனது
மலர் அம்புகளும்; அழல் பிரிந்தன - காம வெப்பத்தை உண்டாக்குதலை
ஒழித்தன; அன்றில் - (என்றும் பிரியாது  ஒன்றியிருக்கும்) அன்றிற்
பறவைகள்; துணை பிரிந்த- தம் துணையைப் பிரிந்து தனித்திருப்பவாயின.

     இராமனது  பிரிவு உயிரினங்கள் இன்பத்தை இழக்கச்செய்தபடி.
யாரும் குடைபிடித்துச் செல்வது இல்லை ஆதலின் குடை நிழல் பிரிந்தன
என்றார்.யாரும் வேட்கை உற்றிலர் என்பதனை மன்மதன்வாளி வெப்பத்தை
விட்டது  என்பதால் உணர்த்தினார். ‘ஏ’ காரம் ஈற்றசை.             202

1808.தார் ஒலி நீத்தன, புரவி; தண்ணுமை
வார் ஒலி நீத்தன, மழையின் விம்முறும்;
தேர் ஒலி நீத்தன, தெருவும் - தெண் திரை
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலவே.

     புரவி - குதிரைகள்;  தார் ஒலி நீத்தன - கழுத்திற் கட்டிய
கிண்கிணிமாலையின் ஓசையைக் கையிட்டன; தண்ணுமை - மத்தளம்; வார்
ஒலி நீத்தன -
வாரை  இழுத்துக் கட்டலால் விளையும் ஓசையைக்
கைவிட்டன;  தெருவும் - வீதிகளும்;  தெண்திரை  நீர் ஒலி நீத்தன
நீத்தம் போல -
தெளிந்த அலை நீர் ஒலியை விட்ட கடல் போல;
மழையின் - மேகம் போல; விம்முறும் தேர் ஒலி நீத்தன - ஒலிக்கின்ற
தேர்களின் ஒலியை இழந்தன.

     குதிரை ஒட்டுவாரில்லை,  மத்தளம் அடிப்பார் இலர்,  தெருவில்
தேர்கள் ஓடவில்லைஎன்றார்.  அலை ஒழிந்த  கடல் தேரோசை இழந்த
தெருவுக்கு  உவமை ஆயிற்று.  ‘ஏ’ஈற்றசை.                       203

1809.முழவு எழும் ஒலி இல; முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல; இமைப்பு இல் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல; வேறும் ஒன்று இல,
அழ எழும் ஒலி அலது - அரச வீதியே.