இக் காண்டம் அயோத்தியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இப் பெயர் பெற்றது. இதில் மந்திரப் படலம் முதலாகத் திருவடி சூட்டு படலம் ஈறாக மொத்தம்பதின்மூன்று படலங்கள் உள்ளன. தயரதன் இராமபிரானுக்கு முடிசூட்டக் கருதுவது தொடங்கி, காடு சென்றஇராமனைப் பரதன் சென்று கண்டு திரும்புவது வரையிலான கதை நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன. தாய் தந்தையர் சொல் தட்டாத இராமன் பண்புச் சிறப்பும், அரசின்மீது சிறிதும்ஆசையில்லாத பரதன் பெருஞ்சிறப்பும், கைகேயியின் கொடுமையும், ஏழை வேடன் குகன் இராமன்மீதுகாட்டும் பரிவும் இக் காண்டத்தில் நன்கு வெளிப்படுகின்றன. 1. மந்திரப் படலம் தயரதன் இராமனுக்கு முடிசூட்டுவது குறித்து அமைச்சர்களோடு கூடி ஆராய்ந்தசெய்தியினைக் கூறுகிறது இப்படலம். மந்திரம் என்பதற்கு ஆலோசனை என்பது பொருள். தயரதன்அரசவையை அடைந்தான். தன் அமைச்சர்களை அழைத்தான். வசிட்டன் முதலான மாண்புகள் நிறைந்த அமைச்சர்கள் வந்து சேர்ந்தனர். தயரதன் தான் துறவு மேற்கொள்ளவும், இராமனுக்கு முடிசூட்டவும்விரும்புவதாகக் கூறினான். அவன் கருத்தினை ஏற்று, வசிட்டன் இசைவாகப் பேசினான். அது கேட்டுத்தயரதன் மகிழ்ந்தான். ஏனைய அமைச்சர்களின் கருத்தும் அதுவேயாக இருத்தலைச் சுமந்திரன்தெரிவித்தான். தயரதன், சுமந்திரனை இராமனை அழைத்துவரப் பணித்தான். அவனும் இராமன்திருமனைக்குச் சென்று அவனைக் கண்டு செய்தி தெரிவித்தான். இராமன் தேர் ஏறித் தயரதனிடம்சேர்ந்தான். தயரதன் இராமனை அரசேற்க வேண்டினான். இராமன் அதற்கு இசைந்தான். இருவரும் தத்தம் இருப்பிடம் சேர்ந்தனர். தயரதன் மன்னர்களுக்கு ஓலை போக்கினான். பின்புமன்னர்களிடம் தன் கருத்தைத் தெரிவித்தான். அவர்களும் அக்கருத்தினை ஏற்று, அதற்குரியகாரணங்களை எடுத்துரைத்தனர். தயரதன் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்திவிட்டு முடிபுனைய நாள்குறிக்கச் சோதிடரோடு தனி மண்டபம் அடைந்தான். இச்செய்திகளே இப்பகுதியில் கூறப்பெறுவன. |