பக்கம் எண் :

300அயோத்தியா காண்டம்

1816.‘திக்கு நோக்கிய தீவினைப்
     பயன்’ எனச் சிந்தை
நெக்கு நோக்குவோர், ‘நல்வினைப்
     பயன்’ என நேர்வோர்,
பக்கம் நோக்கல் என்?
     பருவரல் இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும்,
     அருந் துயர் உழந்தார்.

     பருவரல் இன்பம் என்று இரண்டும் - துன்பம்,  இன்பம் என்ற
இரண்டையும்; ஒக்க நோக்கிய யோகரும் - சமமாகப் பார்க்கின்ற ஞான
யோகிகளும்; அருந்துயர்உழந்தார் - அரிய துன்பத்தில் வருந்தினார்
(என்றால்); ‘திக்கு நோக்கிய தீவினைப்பயன்’ எனச் சிந்தை நெக்கு
நோக்குவோர் -
தம் இடத்தை நோக்கி வந்த தீவினையின்பயன் இது
என்று மனம் உடைந்து துன்புற்றுப் பார்ப்பவர்; ‘நல்வினைப் பயன்’ என
நேர்வோர் -
இது நல்வினையால் விளைந்த பயனாகும் என்று உடன்பட்டு
மகிழ்வோராகிய; பக்கம் நோக்கல் என் உலக மக்களிடத்து - ஆராய்ந்து
கூற என்ன உள்ளது?

     தீவினையில் துவண்டு நல்வினையில் மகிழும் உலகினர் பற்றிச்
சொல்ல என்ன உள்ளது?என்றார். ஏனெனின் சமநிலை உடைய ஞானிகளே
துயர் வடித்தனர் ஆகலின். 1762, 1763 ஆம்பாடல்களில் வசிட்டன் உணர்வு
குறித்தமை இங்கு ஒப்பிட்டுணரத் தக்கது.                           211

1817.ஓவு இல் நல் உயிர் உயிர்ப்பினோடு
     உடல் பதைத்து உலைய,
மேவு தொல் அழகு எழில் கெட,
     விம்மல் நோய் விம்ம,
தாவு இல் ஐம்பொறி மறுகுற,
     தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது - அவ்
     அயோத்தி மா நகரம்.

     அவ் அயோத்தி மா நகரம்  -;  ஓவு இல் நல் உயிர் - ஒழிதல்
இல்லாத நல்ல உயிர்; உயிர்ப்பினோடு - பெரு மூச்சோடு;  உடல்
பதைத்து -
உடலில் துடித்து; உலைய - அங்கும் இங்குமாய் வருந்த;
மேவு - பொருந்திய;  தொல் எழில்அழகு கெட - பழைய வளரும்
அழகு கெட;  விம்மல் நோய் விம்ம - அழுகைநோய் மிக; தாவு இல்
ஐம்பொறி மறுகுற -
கெடுதல் இல்லாத  ஐம்பொறிகள் சுழன்று கலங்க;
தயரதன் என்ன - தயரதனைப் போல;  ஆவி நீக்கின்றது  ஒத்தது -
உயிர் விடுவதைத்போல் உள்ளது.