‘நினைவின்’ என்பதற்கு நினையும் மாத்திரத்து எனக் கூறி, இராமன் சிந்திக்குமளவிலேயேஅவ்வளவு விரைவாக மரவுரி உடுத்தி அயல் வந்து நின்றாள் எனலும் ஆம். கையினள் - செயலினள்(கை - செய்கை) எண்ணல், துணிதல், செய்தல் மூன்றும் பிராட்டியிடத்து விரைந்து நிகழ்ந்தன. 224 சீதையைக் கண்டோர் வருத்தம் 1830. | ஏழைதன் செயல் கண்டவர் யாவரும் வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்; வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ? - ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! |
ஏழை தன் செயல் - சீதையின் மரவுரி உடுத்த செயலைக்; கண்டவர் யாவரும் -பார்த்த எல்லோரும்; வீழும் மண்ணிடை வீழ்ந்தனர் - இறத்தற்கு இடமான நிலத்தில்விழுந்தார்கள்; வீந்திலர் - இறக்கவில்லை; வாழும் நாள் உள என்றபின் -ஆயுள் நாள் இன்னும் இருக்குமானால் அவர்கள்; மாள்வரோ? - இறப்பார்களோ; ஊழி பேர்கினும் - பிரளயமே நேரிட்டாலும்; உய்குநர் உய்வர் - பிழைக்கும் விதி உள்ளவர் பிழைப்பர். மிக்க சோகமும் உயிர்த்துடிப்பும் நிகழ்ந்தது கண்டவர் வீழ்ந்து இறக்காமைக்குக்காரணம் அவர்களுக்கு ஆயுள் உள்ளமையே அன்றி வேறன்று என்றார். வேற்றுப்பொருள் வைப்பணி. ‘ஏ’காரம் ஈற்றசை. 225 1831. | தாயர், தவ்வையர், தன் துணைச் சேடியர், ஆயம் மன்னிய அன்பினர் என்று இவர் தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான் தூய தையலை நோக்கினன், சொல்லுவான்; |
தாயர் -; தவ்வையர் - தமக்கைமார்கள்; தன்துணைச் சேடியர் - சீதைக்குத் துணையாகிய தோழிப் பெண்கள்; ஆயம் மன்னிய அன்பினர்- தோழியர்கூட்டமாக உள்ள அன்பினை உடையவர்கள்; என்று இவர் -; தீயில் மூழ்கினர் ஒத்தனர் -நெருப்பில் விழுந்து முழுகியவர்களைப் போன்று ஆனார்கள்; செங்கணான் - சிவந்தகண்களை உடைய இராமன்; தூய தையலை நோக்கினன் சொல்லுவான் - கற்பிற் சிறந்தசீதையைப் பார்த்துச் சொல்லுகின்றான்; ஆடவர்க்குச் செங்கண் கூறல் வழக்கு. நோக்கினன்-முற்றெச்சம். 226 இராமன் சீதை உரையாடல் 1832. | ‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும், வெல்லும் வெண் நகையாய்! விளைவு உன்னுவாய் - |
|