பெருந்தகை - இராமன்; பிறிது ஓர் மாற்றம் பேசலன் - வேறு ஒருவார்த்தையும் பேசாதவனாய்; மைந்தரும் மாதரும் மறுகி வீழ்ந்து அழ - ஆடவரும் மகளிரும் மனங்கலங்கி விழுந்து அழுதலால்; (அவர் கண்ணீரால் சேறாகி) செறுவின் வீழ்ந்த- வயல் போலக் கிடக்கின்ற; நெடுந் தெரு - பெரிய தெருவின்கண்; நெறிபெறாமை - வழி கிடைக்கப் பெறாமையால்; அரிதினின் - சிரமப்பட்டு; நீங்குவான் சென்றனன் - நீங்கிச் சென்றான். அழுதலால் கண்ணீர் வெள்ளம் வீழ்ந்து தெரு சேறு ஆகியது. அதனால், வயல்போல உள்ளது. இனி ‘செரு’ என எதுகை நோக்கி இடையினம் வல்லினம் ஆனதாகக் கொண்டு’ போர்க்களம் போலமைந்தரும் மகளிரும் தாறுமாறாக வீழ்ந்து கிடக்கின்ற தெருவில் சிரமப்பட்டுக் கடந்து சென்றான் - என உரைத்தலும் ஒன்று. செறு - நெருக்கம் என்று பொருள் கூறி நெருக்கமாகவீழ்ந்த என்றும் ஆம். கூட்ட மிகுதியால் தெருவில் நடத்தல் அரிதாயிற்று. 229 மூவரும் போதல் 1835. | சீரை சுற்றித் திருமகள் பின் செல, மூரி விற் கை இளையவன் முன் செல, காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ் ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? |
திருமகள் - சீதை; சீரை சுற்றி - மரவுரி அணிந்து; பின்செல - பின்னால் வர; மூரி விற்கை - வலிய வில் ஏந்திய கையை உடைய; இளையவன் -இலக்குவன் முன்னே செல்ல; காரை ஒத்தவன் - கார் மேக வண்ணனாய இராமன்; போம்படி - போகும் தன்மையை; கண்ட - பார்த்த; அவ் ஊரை - அந்தநகரத்தவரை; உற்றதை - அடைந்த துன்பத்தை; உணர்த்தவும் ஒன்ணுமோ? -எடுத்துக் கூறவும் இயலுமோ (இயலாது என்றபடி). சீதை முன்செல, இளையவன் பின்செல என்று ஒரு பாடமும் உண்டு. மனைவி முன்போகப் போதலேபெண்டிரைக் காத்துச் செல்வார்க் குரிய தாகலின் அப்பாடமே கொள்வாரும் உளர். 230 நகர மக்கள் இராமனைத் தொடர்தல் 1836. | ஆரும் பின்னர் அமுது அவலித்திலர்; சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்; ‘வீரன்முன் வனம் மேவிதும் யாம்’ எனா, போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார். |
ஆரும் - எவரும்; பின்னர் - பிறகு; அழுது அவலித்திலர் - அழுது துன்பம் உறவில்லை; சோரும் சிந்தையர் - தளர்ந்த மனத்தோடு; |