யாவரும் சூழ்ந்தனர் - அனைவரும் ஆலோசித்து; ‘வீரன்முன் - இராமனுக்கு முன்னே; யாம் வனம் மேவுதும்’ - நாம் காட்டிற்குச் செல்வோம்; எனா -என்று; போர் என்று ஒல்லொலி கைம்மிக - ‘போர்’ என்று ஒல்லென்ற ஒலி அளவு கடக்க;போயினார் - புறப்பட்டுச் சென்றார்கள். ‘போர்’ என்பது ஒலிக்குறிப்பு. ’போர்’ போல ஒலி மிகுதியாக எனலும் ஆம். இராமனுக்குமுன்பே காடு செல்வதென முடிவு செய்தமையால் அழுதலும் அவலித்தலும் இல்லை. 231 இராமன் தாயரை வணங்கி மன்னனை ஆற்றக் கூறல் 1837. | தாதை வாயில் குறுகினன் சார்தலும், கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா, ‘ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்’ என்றான்; மாதராரும் விழுந்து மயங்கினார். |
கோதை வில்லவன் - மாலை அணிந்த வில்லை உடைய இராமன்; தாதை -தந்தையது; வாயில் - மாளிகை வாயிலை; குறுகினன் சார்தலும்- அணுகிச்சேர்ந்தவுடன்; தாயரைக் கும்பிடா - உடன்வந்த தாய்மார்களை வணங்கி; ‘ஆதி மன்னனை - சக்கரவர்த்தியை; நீர் ஆற்றுமின் - நீங்கள் இங்கேயிருந்து தேற்றுங்கள்;’ என்றான் -; மாதராரும் - அம் மகளிரும்; விழுந்து மயங்கினார் -தரையில் விழுந்து மயங்கினார்கள். ‘ஆதி மன்னன்’ சக்கரவர்த்தி தயரதன் - மூத்த முதல் அரசன் ஆதலின். ‘ஆதி அரசன்’(1708) என்பது காண்க. தயரதனைக் காணாமலே கானகம்செல்வதாக வான்மீகம் சொல்லவில்லை; இதுகம்பர் மாற்றம். 232 தாய்மார் ஆசிகூறல் 1838. | ஏத்தினார், தம் மகனை, மருகியை; வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார், ‘காத்து நல்குமின், தெய்வதங்காள்!’ என்றார்- நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். |
நாத் தழும்ப - நா காய்ப்பு ஏறும்படி; அரற்றி - அழுது; நடுங்குவார் - நடுங்கும் அத்தாயர்; தம் மகனை, மருகியை - தம் மகனாகிய இராமனையும் மருகியாகியசீதையையும் ; இளையோனை - இலக்குவனை; வாழ்த்தினார் - வாழ்த்தினார்கள்; ஏத்தினார் - புகழ்ந்தார்கள்; வழுத்தினார் - துதித்தார்கள்; ‘காத்து நல்குமின் தெய்வதங்காள்!’ - காப்பாற்றிக் கொடுங்கள் தெய்வங்களே;’ என்றார்-. |