பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 327

உண்டாகின்றதே  என்று கருதி;  புறத்து  உறு பெரும்பழி - உலகரால்
சொல்லப்படும் பெரியபழியை;  பொது  இன்று எய்தலும் - சிறப்பாக
அடைதலையும் (உணராது);  அறத்தினைமறத்தியோ?’ -  தருமத்தினை
மறந்தாயோ?’

     துன்பத்திற்குப் பயந்து தருமத்தை மறக்கலாமோ? தருமத்தை மறந்தால்
பழி வந்து சேரும் அல்லவா? உலகத்தில் பிறந்த பிறகு இன்ப துன்பங்களை
ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற வேண்டுமே அன்றித் துன்பத்திற்குப்
பயந்து அறத்தை மறத்தல் கூடாது என்றான். உள்ளி - உளி - தொகுத்தல்
விகாரம்.                                                      27

1867.‘முன்பு நின்று இசை நிறீஇ, முடிவு முற்றிய
பின்பும் நின்று, உறுதியைப் பயக்கும் பேரறம்,
இன்பம் வந்து உறும்எனின் இனிது; ஆயிடைத்
துன்பம் வந்து உறும்எனின், துறக்கல் ஆகுமோ?

     ‘பேர் அறம் - பெருமை பொருந்திய தருமம்; முன்பு நின்று இசை
நிறீஇ -
(தன்னை மேற்கொள்பவனுக்கு இவ்வுலகில்) முன்னதாகப் புகழை
நிலை நிறுத்தி;  முடிவு முற்றியபின்பும் நின்று - இந்த வாழ்வு முடிவுக்கு
வந்தபிறகும் இருந்து (மறுமையில்);  உறுதியைப்பயக்கும் - நன்மைப்
பயனாகிய மேல் உலகத்தைத் தரும்; இன்பம் வந்து உறும் எனின்இனிது-
(வாழ்வில்) இன்பம் வந்து  நேருமாயின் இனிமையானது;  ஆயிடை -
அவ்விடத்து; துன்பம் வந்து உறும் எனின் - துன்பம் வந்து நேருமாயின்;
துறக்கல்ஆகுமோ?’ - அவ்வறத்தைக் கைவிட ஆகுமோ?

     இன்ப துன்பங்கள் கலந்ததே வாழ்வு. அறவழி நடப்பார்க்கு  இன்பமே
வரும்.  ஆயினும்,ஒருவேளை துன்பம்  வருமாயினும் அதுபற்றி அறத்தைக்
கைவிடல் ஆகாது  என்பதாம். அறம் என்றசொல்லின் முழுப் பொருளும்
தருமம் என்பதன்கண் அடங்காது.  பொருள் விளங்க வேண்டிய அளவுக்கே
அறம் என்பதற்குத் தருமம் என்று உரை காண்கிறோம். ‘நன்றாங்கால்
நல்லவாக் காண்பவர்அன்றாங்கால், அல்லல் படுவது  எவன்’ என்னும்
குறளை (குறள். 379) இங்கு நோக்குக.                            28

1868.‘நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற,
மறப் பயன் விளைக்குறும் வன்மை அன்று அரோ;
இறப்பினும், திரு எலாம் இழப்ப எய்தினும்,
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே.

     ‘சூரர் ஆவது - வீரத்திற் சிறந்த சூரர் என்று  ஒருவர் சொல்லப்
பெறுவது;  நிறப் பெரும் படைக்கலம் - ஒளி படைத்த பெரிய ஆயுதம்;
நிறத்தின் நேர் உற -மார்பிடத்து  நேரே  வந்து பொருந்த;  மறப்பயன்
வினைக்குறும் வன்மை அன்று -
வீரப்பயனை விளைத்துக் காட்டும்
வல்லமை அன்று;  இறப்பினும் - இறந்தாலும்;  திருஎலாம்