தேவர் உலகில்; அப்புறத்தில் - வேறு இடங்களில்; விளங்கும் மாதர் - கற்புடன் விளங்குகின்ற மாதர்கள்; ‘இவரின் கற்பினார் யாரோ! என - இவர்களைக்காட்டிலும் கற்பிற் சிறந்தவர் யார் உளரோ என்னும்படி; நின்றார் - (அத்தேவிமார்)நின்றார்கள்; களங்கம் நீத்த மதிமுகத்தார் - களங்கம் இல்லாத மதிபோன்ற முகத்தைஉடையவர்களாய அத்தேவிமார்; கான வெள்ளம் கால் கோப்ப- காட்டு நீர்ப் பெருக்கு தன் அடியைச் சூழ உள்ள; துளங்கல் இல்லாத் தனிக் குன்றில் - சிறிதும் அசைந்து கொடுக்காத பெரிய மலையில்; தொக்க மயிலின் - சேர்ந்து இருந்த மயில் கூட்டத்தைப்போல; சூழ்ந்திருந்தார் - அவ் அரண்மனையில் திரண்டிருந்தனர். அடியில் நீர் சூழ மலையில் மயில் திரண்டது போல் என உவமைக்காண்க. கண்ணீர் வெள்ளம்சூழ அரண்மனையில் தேவிமார் எனஉவமைக் கேற்பக் கொள்ளலாம். இனி கான வெள்ளம் என்பதற்கு அவரது அழகுரவோசையாகிய வெள்ளம் என்பாரும் உளர்; பொருந்துமேற் கொள்க. 71 1911. | கைத்த சொல்லால் உயிர் இழந்தும், புதல்வற் பிரிந்தும், கடை ஓட மெய்த்த வேந்தன் திரு உடம்பைப் பிரியார் பற்றி விட்டிலரால்; பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவிப் பெரிய கடல் கடக்க. உய்த்து மீண்ட நாவாயில், தாமும் போவார் ஒக்கின்றார். |
புதல்வன் பிரிந்தும் - மகனைப் பிரிந்தும்; கைத்த சொல்லால் உயிர்இழந்தும் - மனம் வெறுக்கத் தக்க (கைகேயி கூறிய) கொடிய சொல்லால் தன் உயிரே நீங்கப்பெற்றும்; கடை ஒட - இறுதிவரையிலும்; மெய்த்த வேந்தன் - மெய்யையே பற்றிநின்ற தசரத மன்னனுடைய; திருவுடம்பை - திருமேனியை; பற்றிப் பிரியார் விட்டிலர்- பிடித்துக் கொண்டு பிரியாதவர்களாய் விடாதவர்களாய் உள்ள தேவிமார்; பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் - பித்துக் கொள்வதற்குத் காரணமாய அவிச்சை என்னும் சுறா மீன்துள்ளிச் சஞ்சரிக்கும்; பிறவிப் பெரிய கடல் கடக்க - பிறவி என்னும் பெரியகடலைத் தாண்டுதற்கு; உய்த்து மீண்ட நாவாயில் - (முன்பு ஒருவரை) அக்கரை செலுத்தித்திரும்பி வந்த மரக்கலத்திலே; தாமும் போவார் ஒக்கின்றார் - தாமும் போக இருக்கின்றவர்களை ஒத்திருந்தார்கள். பிரிதற்கரிய மகன் பிரிந்தாலும், உயிரே, பிரிந்தாலும் இறுதிவரை சத்தியத்தைவிடாமல் நின்றவன் தயரதன் என்றார். பித்த மயக்கு - மண், பெண், பொன் என்னும்மூவாசைகளை உண்டாக்குகின்ற அவிச்சை, அவிச்சை என ஒன்றைமட்டும் குறித்தாலும் அவிச்சை,அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்னும் |