எழுந்தார் -புறப்பட்டு; பெயர்ந்தார் - இராமன் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று; அருள்இருக்கும் பெருந்தாமரைக்கண் ஒரு முகிலை - அருள் வீற்றிருக்கும் பெரிய தாமரை மலர்போன்ற கண்களை உடைய கரு முகில் வண்ணனாகிய இராமனை; காணார் - காணாது; பேதுற்றார் - மயக்கம் அடைந்து; ‘பொருந்தா நயனம் பொருந்தி - மூடாத கண்கள்மூடி; நமைப் பொன்றச் சூழ்ந்த - நம்மை அழியும் படி ஆலோசித்துச் செய்தன;’ என -என்று சொல்லி; புரண்டார் - தரையில் வீழ்ந்து புரளத் தொடங்கினார்கள். துக்கத்தால் இதுவரை மூடாத கண்கள் ‘இராமனுடன் இருக்கிறோம். இராமனுடனேயே காட்டிலும்இருக்கப் போகிறோம்’ என்னும் களிப்பினால் உறங்கிவிட்டுனர். அதுவே நமக்கு விபத்தாயிற்றுஎன்று வருந்தினர் நகரமாந்தர். அருள் குடியிருக்கும் கண்களை உடையான் அவன் என்று இவ்விடத்தில்கூறியது நகரமாந்தரை உறங்கச் செய்ததும் அவன் செய்த அருளே என்பதை உணர்த்தி நயம் செய்கிறது.அவதார நோக்கத்துக்கு இடையூறு ஆக நகரமாந்தர் தன்னுடன் வராமைப்பொருட்டும், பின்னர்த் தன்னைய பரத குணாநுபவங்களை நகர மாந்தர் அனுபவித்தற்கும் ஆக அவர்களை உறங்கச் செய்ததுஅருளாலே என அறிக. 79 1919. | எட்டுத் திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர்க் கடலுள்; ‘விட்டு நீத்தான் நமை ’ என்பார்; ‘வெய்ய, ஐயன் வினை’ என்பார்; ‘ஒட்டிப் படர்ந்த தண்டகம், இவ் உலகத்து உளது அன்றோ? உணர்வைச் சுட்டுச் சோர்தல் பழுது அன்றோ? தொடர்ந்தும் தேரின் சுவடு’ என்பார். |
எட்டுத்திசையும் ஓடுவான் எழுவார் - எண்திசைகளிலும் ஓடுவதற்காக எழுந்திருப்பார்; விழுவார் இடர்க்கடலுள் - ஆற்றாமையால் அது செய்யமாட்டாது துன்பக்கடலுள் விழுவார்; ‘நமை விட்டு நீத்தான்’ என்பார் - நம்மை விட்டுவிட்டுப் பிரிந்துபோய்விட்டான் என்று கதறுவார்; ‘ஐயன் வினை வெய்ய’ என்பார் - இராமன் செய்தசெயல் கொடியது என்பார்; ஒட்டிப் படர்ந்த தண்டகம் - பொருந்திப் பரவியுள்ள தண்டகவனம்; இவ் உலகத்து உளது அன்றோ? - இந்த உலகத்தில்தான் உள்ளது அல்லவா, உணர்வைச் சுட்டுச் சேர்தல் பழுது அன்றோ? - அறிவைப் பொசுக்கித் தளர்வது குற்றம்அல்லவா; தேரின் சுவடு தொடர்தும்’ - அவன் சென்ற தேரின் சக்கரம் அழுந்திய வடுவைத் தொடர்ந்து சென்று அடைவோம்;’ என்பார் -. துக்கத்தால் நகரமாந்தர் துடித்தபடி இதனால் விளங்கும். 80 |