1929. | மா கந்தமும், மகரந்தமும், அளகம் தரும் மதியின் பாகம் தரும் நுதலாளொடு, பவளம் தரும் இதழான், மேகம் தனி வருகின்றது மின்னொடு என, மிளிர் பூண் நாகம் தனி வருகின்றது பிடியோடு என, நடவா. |
மா கந்தமும் - மிக்க நறுமணத்தையும்; மகரந்தமும் - வாசனைப் பொடியும் கலந்து பொருந்திய; அளகம் - கூந்தல்; தரும் - பெற்ற; மதியின் பாகம்தரும் நுதலாளொடு - அரைச்சந்திரன் வடிவாயமைந்து நெற்றியை உடைய சீதையோடு; பவளம்தரும் இதழான் - பவளத்துக்குச் செம்மை தரும் திரு அதரத்தை உடைய இராமன்; மேகம்மின்னொடு தனி வருகின்றது என்ன - மேகம் மின்னலோடு சேர்ந்து தனித்து வருகின்றது போலவும்; மிளிர் பூண் - அழகிய அணி அணிந்த; நாகம் - ஆண்யானை; பிடியோடு தனி வருகின்றது என்ன - பெண் யானையோடு தனித்து வருகின்றது போலவும்; நடவா -நடந்து சென்று. நறுமணப் பொடிகளையும் மலர்களில் உள்ள மகரந்தங்களையும் கூந்தலுக்கு இட்டு மணம் ஊட்டல்வழக்கு. கூந்தலின் கீழ் உள்ள நெற்றியை ‘அளகம் தரும் மதியின் பாகம்’ என்றார். குளகச்செய்யுள். 4 1930. | தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச் சுவை அமுதின், கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின், பசை நறவின், விளை கட்டியின், மதுரித்து எழு கிளவிக் கிளி விழிபோல், களை கட்டவர் தளை விட்டு எறி குவளைத் தொகை கண்டான். |
தொளை கட்டிய கிளை- தொளை பொருந்திய புல்லாங்குழலிலிருந்து; முட்டிய -தாக்கி எழுப்பிய; சுருதி - காதால் கேட்டு அனுபவிக்கும் தன்மையதான; சுவை அமுதின்- சுவையுடைய இசை அமுதம் போலவும்; கிளை கட்டிய கருவி - நரம்புகள் இணைத்துக்கட்டப்பெற்ற யாழிலிருந்து; கிளர் இசையின் - உண்டாகின்ற இசையைப் போலவும்; பசை நறவின் - சாரமுள்ள தேனைப் போலவும்; விளை கட்டியின் - நன்றாக விளைந்த பாகுக் கட்டி போலவும்; மதுரித்து எழு - இனிமை உடையதாகி எழுகின்ற; கிளவி -பேச்சினை உடைய; கிளி - கிளி போல்பவளாகிய சீதையினது; விழி போல் -கண்களைப் போல; களை கட்டவர் - களை பறிப்பவர்; தளைவிட்டு எறி -வயலிலிருந்து வீசி எறிகின்ற; குவளைத் தொகை கண்டான் - குவளை மலர்களின்கூட்டத்தைப் பார்த்தான். |