நட்புக்கு உடம்பும் உயிரும் சேர்ந்த சேர்க்கையைச் சொல்வது வழக்கு. ஆதலின், ‘மெய்உயிர் அனையானும்’ என்று குகன் - இராமனுக்குள்ள நட்பைச் சொன்னார். ‘உடம்பொடு உயிரிடைஎன்ன மற்றன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு’ என்ற குறளையும் (குறள் 1122) காண்க. நாவாய்களின் செல்கை அன்னச்செலவு போலும் என்றார்; பின்னும் அன்னப் பேடை சிறை இலதாய்க்கரை, துன்னிற்றென்னவும் வந்தது தோணியே’ என்றது (2372.)காண்க. 34 1987. | பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும், சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட; தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய், காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா! |
பால் உடை மொழியாளும் - பால்போலும் இன்சொல் உடையவளாகிய சீதையும்; பகலவன் அனையானும் - சூரியனை ஒத்த இராமனும்; சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர்விளையாட - கயல் மீன்களை உடைய நீண்ட புண்ணியக் கங்கை நீரைச் சிதறி எறிந்து விளையாடிக் கொண்டே செல்ல; தோல் உடை நிமிர் கோலின் துளவிட- முன்னர்த் தோல்பட்டையை உடைய நீரைத் தள்ளி மேல் உயரும் துடுப்புகளால் நீரைத் தள்ள; எழு நாவாய் -செல்லுகின்ற தோணி; காலுடை நெடு ஞெண்டின் - கால்களை உடைய பெரிய நண்டைப் போல; கடிது சென்றது - விரைந்து சென்றது. படகிற் செல்வார் நீர் சிதறி விளையாடல் இயல்பு. துடுப்புகளின் முனையில் இறக்கைகள்போல் தோலைத் தைத்திருப்பர், நீரைத் தள்ளுவதற்கு வசதியாக. துடுப்புகள் கால்களாகவும்நாவாய் நண்டாகவும் காண்க. நண்டு செல்லுங்கால் பக்கங்களில் ஒதுங்கி ஒதுங்கிச் செல்லும். அத்தன்மை நாவாயின் செலவுக்கு ஒப்பாகும் என்க. ‘அம்மா’ வியப்பிடைச்சொல். 35 1988. | சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை, காந்து இன மணி மின்ன, கடி கமழ் கமலத்தின் சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால், ஏந்தினள்; ஒரு தானே ஏற்றினள்; இனிது அப்பால். |
|