‘தீயன வகை யாவும் - கொடிய தன்மை படைத்த எப்பொருளும்; திசை திசை செலநூறி - நாலாதிசைகளிலும் ஓடி ஒளியும்படி அழித்து; தூயன உறைம கானம் - தூய விலங்குமுதலியன வசிக்கும் காடுகளை; துருவினென் வரவல்லேன் - தேடித் தருவதற்கு வல்லமைஉடையேன்; மேயின பொருள் நாடித் தருகுவென் - நீங்கள் விரும்பி பொருளை எங்கிருப்பினும் தேடிக் கொண்டுவந்து தருவேன்; ஏவின வினைமுற்றும் செயவல்லேன் -நீங்கள் ஏவிய எல்லா வேலைகளையும் செய்ய வல்லமை உடையேன்; இருளினும் நெறி செல்வேன் -நள்ளிருள் பொழுதும் காட்டு வழியில் செல்லும் தீரம் உடையேன். விலங்கு, பறவை, மரம், செடி, கொடி முதலியவற்றுள் ஊறிழைக்கும் எப்பொருளும் அடங்கத்‘தீயன வகையாவும்’ என்றும். தூயன அனைத்தும் அடங்க, ‘தூயன உறைகானம்’ என்றும் கூறினான். காட்டில் பழகியவன் ஆகலின் இருளிடையிலும் செல்லுதல் தனக்கு எளிது என்றானாம். 39 1992. | ‘கல்லுவென் மலை; மேலும் கறவலையின் முதல் யாவும்; செல்லுவென் நெறி தூரம்; செறி புனல் தர வல்லேன்; வில்இனம் உளென்; ஒன்றும் வெருவலென்; இருபோதும் - மல்லினும் உயர் தோளாய்! - மலர் அடி பிரியேனால்; |
‘மல்லினும் உயர் தோளாய்! - மற்போர்த் திறமையிலும் மேன்மைபொருந்தியதோள்களை உடைய இராமனே!; மலை கல்லுவென் - (செல்லும் வழி) மலையாயினும் தோண்டிவழிசெய்வேன்; மேலும் கவலையின் முதல் யாவும் (கல்லுவென்) - அதன்மேலும் கவலைக்கிழங்கு முதலிய (உணவு வகைகளையும்) தோண்டி எடுப்பேன்; நெறி தூரம் செல்லுவென் - சேய்மையான வழிகளிலும் செல்வேன்; செறி புனல் தர வல்லேன் - உயிர் செறிதற்குக்காரணமான நீரை எங்கிருந்தும் கொண்டு தருதற்கு உரிய வல்லமை உடையேன்; வில் இனம் உளென்- துணைக்கு வில் ஏந்திய சேனையை உடையேன்; ஒன்றும் வெருவலென் - எதற்கும் அஞ்சமாட்டேன்; இருபோதும் மலர் அடி பிரியேன்- பகல், இரவு ஆகிய இருபொழுதுளகளிலும் உன்னுடைய மலர்போன்ற அடிகளைப் பிரியாமல் உடனாகத் தங்கியிருப்பேன். ‘கல்லுவென்’ என்பதை மலைக்கும், கவலைக் கிழங்குக்கும் கூட்டிம உரைக்க. குறிஞ்சியும் முல்லையும்திரிந்து பாலையாம் ஆதலின் காட்டில் நீரில்லாத இடங்களில்‘நீர் கொண்டுவந்து தருதற்கும்திறமை உடையவர்கள் இருத்தல் தேவை ஆதலின் அதுவும் என்னால் இயலும் என்றான் குகன். ‘ஆல்’ஈற்றசை. 40 |