8. வனம் புகு படலம் குகன் துணையால் கங்கையைக் கடந்து அதன் தென் கரை அடைந்த இராமன், சீதை இலக்குவன்ஆகியோருடன் வனத்திற் புகுந்த செய்தியைத் தெரிவிக்கும் பகுதி என்பது பொருள். கங்கையைக் கடந்தபின் இராமன் முதலியோர் காட்டு வழியில் செல்லுதலும், இனிய காட்டுவழியில் இராமன் சீதைக்குப் பல வகைக் காட்சிகளைக் காட்டிக்கொண்டு செல்லுதலும், மாலைநேரத்தில் சித்திரகூட மலை கண்னுக்குத் தோன்றலும், அவ் வனத்தின்கண் தவம் செய்கின்ற பரத்துவாச முனிவன் இராமனை எதிர்கொள்ளுதலும், முனிவன் இராமனை வந்த காரணம் வினாவ - இராமன்கூறிய பதிலைக் கேட்டு மனம் வருந்திக் கூறுதலும், பரத்துவாச முனிவனது விருந்தோம்பலை இராமன் ஏற்றுக்கொள்ளுதலும், முனிவன் தன்னுடன் தங்கியிருக்குமாறு இராமனை வேண்ட - இராமன் தன்இயலாமையைத் தெரிவித்தலும், முனிவன் சித்திரகூட மலைக்குச் செல்லப் பணித்தலும், முனிவனிடம்விடைபெற்று யமுனைக்கரை அடைதலும், ஆற்றில் நீராடிக் கனி கிழங்கு உண்டு நீர் அருந்தி இளைப்பாறலும், இலக்குவன் தெப்பம் அமைத்து இருவரையும் அக்கரை சேர்த்தலும், மூவரும் பாலைநிலம் புகுதலும், இராமன் நினைவால் பாலை வெப்பம் தணிந்து மாறுதலும், பின்னர் மூவரும்சித்திரகூட மலையைக் காணுதலும் ஆகிய செய்திகள் இப் படலத்தின்கண் கூறப்பெறுகின்றன. காட்டு வழியில் இராமன் சீதை இலக்குவனோடு செல்லுதல் சந்தக் கலிவிருத்தம் 1999. | பூரியர் புணர் மாதர் பொது மனம் என, மன்னும் ஈரமும், ‘உளது, இல்’ என்று அறிவு அரும் இளவேனில், ஆரியன் வரலோடும், அமுது அளவிய சீதக் கார் உறு குறி மானக் காட்டியது, அவண் எங்கும். |
பூரியர் - அறிவிலராய கீழோர்; புணர் - சேர்கின்ற; மாதர் - விலைமகளிரின்; பொதுமனம் என - எல்லோர்க்கும் பொதுவாகிய |