மனம்போல; மன்னும் ஈரமும், ‘உளது இல்’ என்று அறிவு அரும் இளவேனில் - பொருந்தியஈரப்பசையும் உள்ளதோ இல்லதோ என்று அறியமுடியாத (கோடையாகிய) இளவேனிற் காலத்தே; ஆரியன் - இராமன்; வரலோடும் - வன நெறியில் வந்து சேர்ந்த அளவில்; அவண் எங்கும் - அவ்விடம் எல்லாவற்றிலும்; அமுது அளவிய - அமுதம் கலந்த; சீதம் - குளிர்ச்சியான; கார் உறு குறி - மேகம் வருகின்ற அடையாளத்தை; மான- பெருமை உற; காட்டியது - காண்பித்தது. இராமன் காட்டுக்கு வந்ததனால் காட்டின் வெப்பம் தணிந்து மழை வருவதற்கானஅடையாளங்கள்தோன்றத் தொடங்கின என்றவாறாம். பொருட் பெண்டிர் மனம் வெளிக்கு அன்புள்ளது போல - அதாவது ஈரம் உள்ளது போலக் காட்டி, உள்ளே பொருளின்மேல் ஆசை தங்கி இருக்கும். அதுபோலவே இக் காடும் முதுவேனில்போல் வறட்சி உடையதாகவும் இல்லாமல், துளிர்விட்டு ஈரம் உள்ளது போலவும் உண்மையில் ஈரம் அற்றதாகவும் இளவேனிற் காலத்தில் உள்ளது என்றவாறாகும்.“பொன் விலைப் பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே” (353) தாடகை வதைப் படலத்துப்பாவையின் தன்மையை முன்னரும் இவ் உவமையால் கூறினார். 1 2000. | வெயில், இள நிலவேபோல், விரி கதிர் இடை வீச, பயில் மரம் நிழல் ஈன, பனி புரை துளி மேகப் புயல் தர, இள மென் கால் பூ அளவியது எய்த, மயிலினம் நடம் ஆடும் வழி இனியன போனார். |
வெயில் - சூரியன்; விரி கதிர் - பிரிந்த தன் கிரணங்களை; இள நிலவே போல் இடைவீச - இளமையான நிலவொளி போலத் தண்மையாக இடையிடையே வீசவும்; பயில் மரம் - (வனத்தில்) நெருங்கியுள்ள மரங்கள்; நிழல் ஈன - நிழலைத்தரவும்; மேகப் புயல் - மேக மழை; பனி புரை துளிதர - பணியை யொத்தகுளிர்ந்த சிறிய துளிகளைத் தரவும்; இளமென் கால் - இளைய மெல்லிய தென்றற்காற்று; பூ அளவியது எய்த - பூக்களின் நறுமணங்களோடு கலந்து வந்து அடையவும்; மயில் இனம்நடம் ஆடும் - மயிற்கூட்டங்கள் நடனம் ஆடுகின்ற; இனியன வழி - இனிமையாகிய வழிகளில்; போனார் - மூவரும் சென்றார்கள். வெயிலொளி நிலவொளிபோல வீசுதல், மரம் நிழல் தருதல்,மேகம் சிறுநீர்த் திவலை சிந்தல், தென்றல் பூமணத்தோடு வீசுதல், மயில்கள் நடனம் ஆடுதல்ஆகியவற்றால் இவர்கள் செல்லும் வழிகள் களைப்புத் தராது இனியனவாயின. 2 |