| மஞ்ஞையும் மட மானும் வருவன பல - காணாய்! |
நெய்ஞ்ஞிறை நெடு வேலின் நிறம் உறுதிறம் முற்றி - நெய் பூசப்பெற்று நிரம்பியநீண்ட வேற்படையின் தன்மை நிரம்பிய ஆற்றல் பொருந்தி; கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய்!- கை அளவில் அடங்காது மேற்பட்டுச் செல்கின்ற கண்ணை உடையவளே!; மஞ்ஞையும் மடமானும்- மயிலும் இளைய மானும்; மெய்ஞ் ஞிறை விரிசாயல் கண்டும் - உன் மேனியில் நிரம்பியுள்ள விரிந்த மென்மைத் தன்மையைப் பார்த்தும்; நின் விழி கண்டும்- உன் கண்களைப் பார்த்தும்; இனம் என்று கருதின - உன்னைத் தம் இனம் என்றுகருதினவாய்; வருவன பல - வருகின்றன வாகிய பலவற்றை; காணாய் -. நிறை - ஞிறை. போலி; தம் சாயல் சீதையிடம் இருத்தலால் மயில்கள் இனம் என்றுவந்தன. விழியைக் கண்டு தன் இனமான மான் என்று கருதி மான்கள் வந்தன. நிறம் உறு திறம் -மார்பை ஊடுருவிச் செல்லும் பேராற்றல் எனலும் ஆம். இங்கு ஆடவர்தம் நெஞ்சத்தை ஊடுருவிச் செல்லும் ஆற்றலாம். என்றே -ஏகாரம் தேற்றம். 6 2005. | ‘பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் மா அலர் சொரி சூழல், துயில் எழு மயில் ஒன்றின் தூவியின்’ மணம் நாற, துணை பிரி பெடை, தான் அச் சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் காணாய்! |
பூ அலர் குரவோடும் - பூக்கல் மலர்ந்த குரா மரத்தினோடும்; புடை தவழ் - பக்கங்களில் பரவி வளர்கின்ற; பிடவு ஈனும் - பிடவ மரங்கள் உண்டாக்கிய; மாஅலர் சொரி சூழல் - பெரிய மலர்கள் விழுந்து கிடக்கின்ற சுற்றுப் புறங்களில்; துயில் எழும் - தூங்கி எழுந்த; மயில் ஒன்றின் - ஓர் ஆண் மயிலின்; தூவி -தோகை யானது; இன் மணம் நாற - இனிய மணம் வீச; துணை பிரி பெடை தான் -சேவலைப் பிரிந்த பெண்மயிலானது; அச்சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் - அந்த ஆண்மயிலோடு (வேறு பெண் மயில் உறவு கொண்டதாகக் கருதி) மிகவும் ஊடல்கொண்டு மனம்மாறுபடும் தன்மையை; காணாய்-. குரா, பிடவ மலர்கள் விழுந்த இடத்தில் உறங்கி எழுந்த ஆண்மயிலின் உடல் மணத்தைவேறாகக் கருதிப் பெண்மயில் ஊடியது. 7 |