பக்கம் எண் :

420அயோத்தியா காண்டம்

மலர் மணம் வீசும் பூங்கொம்புகள்; உன் துடி புரை இடை நாணி -
உன்னுடைய துடிநடுவை ஒத்தஇடையைக் கண்டு வெட்கம்  உற்று;
துவள்வன - ஒசிந்து  அசைவன;  அவை காணாய் -.

     சீதையின் பாதங்கள் கல்லுறுத்தலினால் தாங்கமாட்டா என்று மரங்கள்
வழியிடை மலர்சிந்துவதாகவும் - சீதையின் இடை கண்டு நாணிக் கொடிக்
கொம்பு துவள்வதாகவும் கூறியதுதற்குறிப்பேற்றம். இவையிரண்டும்
இயல்பாகக் காட்டில் நிகழும் நிகழ்ச்சிகளாம். கொடி,பூங்கொம்பு தனித்தனி
இடைக்கு  உவமையாம்.  துடி - உடுக்கை.                          16

2015.‘வாள் புரை விழியாய்! உன்
     மலர் அடி அணி மானத்
தாள் புரை தளிர் வைகும்
     தகை ஞிமிறு - இவை காணாய் -!
கோள் புரை இருள் வாசக்
     குழல் புரை மழை - காணாய்!
தோள் புரை இள வேயின்
     தொகுதிகள் -அவை காணாய்!

     வாள் புரை விழியாய்! - வாளை ஒத்த கண்களை உடையவளே!;
உம் மலர் அடி அணிமான -
உன்னுடைய மர் போன்ற பாதங்களில்
அணிந்துள்ள அணிகலனை ஒப்ப; தாள் புரைதளிர் வைகும் - உன்
அடியை ஒத்த  தளிரிலே தங்கியுள்ள; தகை ஞிமிறு - அழகுடைய
வண்டுகளாகிய; இவை காணாய் - ; கோள் புரை இருள் வாசக் குழல்
புரை மழை -
கொள்ளும்குற்றம் உடைய இருள் கொண்டதும்வாசனை
பொருந்தியதுமான கூந்தலைப் போல உள்ள மழை மேகத்தை; காணாய்-;
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை -
(உன்) தோளை ஒத்த
இளமையானமூங்கிலின் தொகுதிகளாகிய அவற்றை; காணாய் -,

     அடிபோன்ற தளிரில் அமர்ந்துள்ள வண்டுகள், மலர் போன்ற அடியில்
அணிந்த அணிகலன்போன்றனவாம். எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டு
மறைக்கும் தன்மை உடையது. ஆதலின், ‘கோள்புரை இருள்’ என்றார்.
புரை - குற்றம். வாள் புரை விழி,  மலர் அடி - உவமையணி. தாள் புரை
தளிர், குழல் புரை மழை, தோள் புரை வேய் - எதிர்நிலை யுவமையணி.  17

2016.‘பூ நனை சினை துன்றி,
     புள் இடை இடை பம்பி,
நால் நிற நளிர் வல்லிக்
     கொடி நவை இல பல்கி,
மான் இனம், மயில் மாலை,
     குயில் இனம், வதி கானம் -