பக்கம் எண் :

430அயோத்தியா காண்டம்

 ஈண்ட யாவரும் நெருங்குவர்‘
     என்றனன் இராமன்.

     பூண்ட மாதவன் - மேற்கொண்ட தவத்தை  உடைய பரத்து வாசன்;
அம்மொழி -மேற் சொல்லிய வார்த்தைகளை;  விரும்பினன் புகல -
அன்பொடு கூற; இராமன்-; நெடுநாள் மாண்ட சிந்தைய! - நீண்ட
நாளாகத் தவத்தின் மேற்சென்ற’ பெருமை பெற்றமனத்தினை உடைய
முனிவ!; இது - இந்த இடம்; நிறை புனல் நாட்டுக்கு -நிறைந்த நீர்வளம்
உடைய எனது கோசல நாட்டுக்கு; நீண்டது அன்று - நெடுந்தொலைவில்
உள்ளது அன்று; இவ் வழி - இவ் விடத்தில்;  வைகுவென் என்றால் -
தங்கியிருப்பேனாயின்; யாவரும் - கோசல நாட்டு மக்கள் யாவரும்;
ஈண்ட - விரைவாக; நெருங்குவர் - என்னை வந்து அடைந்துவிடுவார்கள்;’
என்றனன் -.

     நாட்டுக்கு மிக அருகில் தங்கினால் நாட்டு மக்கள் அடிக்கடி வருவர்;
ஆதலின் அது தன்தவத்திற்கும் இடையூறாகும்; முனிவர்களின்
கடமைகளுக்கும் இடையூறாகும் என்று புலப்படுத்திமறுத்தான் இராமன்.  32

முனிவன் கூறிய அறிவுரை  

2031.‘ஆவது உள்ளதே; ஐய! கேள்;
     ஐ - இரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அப் புறம்
     கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர் -
     விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர
     கூடம் என்று உளதே.’

     ‘ஐய! - இராமனே!; கேள் - கேட்பாயாக; ஆவது உள்ளதே - நீ
சொல்லியது உண்மையே ஆகும்;  ஐ இரண்டு அமைந்த காவதப்
பொழிற்கு?
-  பத்துக் காததூரம்  உள்ள இச் சோலைக்கு; அப்புறம்
கழிந்தபின் -
அப்பால் சென்ற பிறகு; தேவர் கைதொழும் சித்திர
கூடம் என்று உளது
- தேவர்களும் வணங்கக்கூடிய சித்திர கூடம்என்று
பெயர் பெற்ற மலை உள்ளது; விண்ணினும் இனிது - தேவர் உலகத்தினும்
இனிமையானது; மேவு காதலின் வைகுதிர் - பொருந்திய அன்போடு
அவ்விடத்தில் தங்கியிருப்பீர்.’

     இராமன் கூறியது  உண்மையே என்பதை ‘ஆவது உள்ளதே’ என்று
கூறி முனிவன் ஏற்றுக் கொண்டான்.அதனால், மேலும் வற்புறுத்தவில்லை.
‘ஏ’ இரண்டும் தேற்றம்.                                         33