சனகன் மகளாகிய பெருமையுடைய இளமை வாய்ந்த மயில் போலும் சாயலள் ஆகிய சீதைக்கு; சந்தனம் செறிந்த - சந்தன மரங்கள் நெருங்கியுள்ள; அந்தக் கனக மால் வரை -அந்தப் பொன் மயமான பெரிய சித்திரகூட மலையினது; இயல்பு எலாம் - தன்மை நலங்கள் எல்லாவற்றையும்; தெரிவு உற - விளங்கும்படி; காட்டும் - காண்பிப்பான் ஆயினன். ‘நினையும்’ என்பதற்கு எப்பொழுதும் தன்னையே நினைந்து கொண்டுள்ள என்று பொருள் கோடல் சிறப்பு. தன்னை இடையறாது நினையும் நித்யசூரிகளாய தேவர்களுக்கும், எப்பொழுதும் நினையாது ஒரோவழி நினையும் மக்களாகிய நமக்கும் தனது சில குணத்தாலே ஒரு நீர்மையுடையவனாய் நித்ய விபூதியிலும் லீலா விபூதியிலும் இன்பம் ஆர்ந்து இருக்கச் செய்கின்ற பெருநிலை நோக்கி, ‘நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து’ என்றார். ‘நினையும் தேவர்’ என்றது நித்ய சூரிகளை ஆம், எப்பொழுதும் இறைவனை நினைதலே தமது வாழ்வாக உடையர் அவராதலின், “என்னும் நம்மாழ்வார் திருவிருத்தத்துள் (21) விண்ணோர்கள் என்றவிடத்து ‘நித்ய சூரிகள்’ என்று பொருள் உரைத்தவாறும் காண்க. இவ்வுலகத்துத் திருவவதாரத்தில் மனிதர்களைப் போல இன்ப துன்பம் உடையவனாய் இயங்கினும் என்றும் எங்கும் எவற்றாலும் பற்றப்படாத அவனது பரத்துவத்தை விளக்கவே ‘அனகன்’, ‘அமலன்’ என்று கூறினார். அம்கண் - அழகிய கண். அருளுடைய கண் என்றவாறாம். ‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்’ என்றார் வள்ளுவரும். (குறள். 575.) 1 2047. | ‘வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே! தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல், நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமஞ் சூல் காளமேகமும் நாகமும் தெரிகில - காணாய்! |
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே! - வாளையும் வேலையும் ஒன்றுசேர்த்து ஒன்றனுள் ஒன்றைக் கலந்து வைத்தாற் போன்ற கண்களை உடைய மயில் போன்ற சாயலை உடையவளே!’ தாளின் - அடிப் பகுதியில்; ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல் -ஏலக் கொடியும் மனம் உள்ள பச்சிலைக் கொடியும் பற்றிக் கிடக்கின்ற மலைப் பக்கத்தே; நீள மாலைய - நீண்ட இயல்பினை உடையவாய்; துயில்வன - உறங்குகின்றனவாகிய; நீர் உண்ட கமம் சூல்- நீரை உண்ட நிறைந்த கருப்பத்தை உடைய; காள மேகமும் -கரிய மேகமும்; நாகமும் - யானைகளும்; தெரிகில - வேற்றுமை உணரமுடியாது ஒன்றுபோலவே உள்ளன; காணாய் - இவற்றைப் பார்ப்பாயாக. |