| | பழுவம், வெங் கனல் கதுவியது ஒப்பன - பாராய்! |
நுண் தொளை குழுவும் வேயினும் - நுண்ணிய தொளை நிரம்பப் பெற்ற புல்லாங்குழல்ஓசையினும்; குறி நரம்பு எறிவு உற்று எழுவு தண்தமிழ் யாழினும் - ஓசையைக் குறித்து(எழுப்பவல்ல) நரம்புகளை (கை விரல்களால்) தடவி எழுப்பப்படுகின்ற குளிர்ந்த இனிய யாழ்ஓசையினும்; இனிய - இனிமையான; சொல் கிளியே - சொற்களைப் பேசுகின்ற கிளிபோல்பவளே!; முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு - முற்றிலும் பூக்கள் பூத்துள்ளஅடிமரத்தை உடைய முருக்க மரம்; இடை மிடைந்த பழுவம் - இடையே நெருங்கி உள்ள காடு; வெங் கனல் கதுவியது ஒப்பன- கொடிய நெருப்பினால் பற்றப்படுள்ளது போன்றவற்றை;பாராய்-. முருக்கமலர் செந்நிறம் உடையது ஆதலின், முழுதும் மலர் பூத்த முருக்க மரம் நிரம்பியுள்ளகாடு தீப்பிடித்தது போலத் தோன்றுவது இயற்கையாகும். 28 | 2074. | ‘வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே! தொளை கொள் தாழ் தடக் கைந் நெடுந் துருத்தியில் தூக்கி, அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு, அருவி நீர் கொணர்ந்து, களப மால் கரி குண்டிகைச் சொரிவன - காணாய் |
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை மயிலே! - வளையல்களைக் காந்தள் மலரில்இட்டு வைத்தாற் போன்ற கைகளை உடைய மயில் போல்பவளே!; மால் கரிக் களபம் - பெரிய யானைக் குட்டிகள்; அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு - அளவுபடாத முதுமை உடையவர்களாய அரிய தவ முனிவர்களுக்கு; அருவி நீர் - அருவியில் உள்ள நீரை; தொளை கொள் தாழ் தடக்கை நெடுந்துருத்தியில் - துவாரத்தைக் கொண்ட தொங்குகிற பெரியதமது கையாகிய நீண்ட தோல்பையிலே; தூக்கிக் கொணர்ந்து - முகந்து கொண்டு வந்து; குண்டிகை - (அம்முனிவர்களது ) கமண்டலத்தில்; சொரிவன - ஊற்றுவனவற்றை; காணாய் -. காந்தள்- கைபோலும் அஃறினைப் பொருளாகிய யானைக் குட்டிகளும் முனிவர்களது முதுமை கருதிஅவர்களுக்கு அருவி நீர் கொணர்ந்து கமண்டலத்தில் ஊற்றுகின்றன என்று சித்திரகூட மலையின்பண்பு நலம் கூறியதாம். களபம் - யானைக்கன்று. முப்பது வயதுடைய யானையைக் குறிக்கும் என்பர். துருத்தி - தோல்பை. (தண்ணீர் முகக்க உதவும்.) 29 |