விமானங்கள்; போவன வருவன - போகின்றவற்றையும், மீள வருகின்றவற்றையும்; பாராய் -. சித்திரகூட மலை தேவர்கள் சஞ்சரிக்கும் இடம், ஆதலின், அவர்கள் விமானத்தில் ஏறிப்போவதும் வருவதுமாயிருத்தலின் வானமெங்கும் விமானத்தால் போர்த்தப்பட்டது போல் உள்ளது.அதுவே அருந்தவம் முடித்தவர்களுக்கு வீடுபேறு தருதற்கு விண்ணுலகு கொண்டு செல்ல வந்த விமானங்கள்போலவும் தோற்றம் அளித்தன. தசும்பு - குடம்; புறம் பொசிகின்ற மண்குடத்தைக்குறிக்கும். 36 இராமன் அந்தணரின் விருந்தினன் ஆதல் 2082. | இனைய யாவையும் ஏந்திழைக்கு இயம்பினன் காட்டி, அனைய மால் வரை அருந் தவர் எதிர்வர, வணங்கி, வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் - மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன். |
மனையில் - அரண்மனையில்; மெய் எனும் மாதவம் புரிந்தவன் மைந்தன் - சத்தியம் என்னும் பெரிய தவத்தைச் செய்தவனாகிய தயரதனுடைய மகனாகிய இராமன்; இனையயாவையும் - இப்படிப்பட்ட சித்திரகூட மலையின் பண்பு நலங்களை யெல்லாம்; ஏந்து இழைக்கு - உயர்ந்த அணிகலக்களை உடையாளாய சீதைக்கு; இயம்பினன் காட்டி - சொல்லிக் காண்பித்து; அனைய மால் வரை - அந்தப் பெரிய சித்திரகூட மலையின்; அருந்தவர் - அரிய முனிவர்கள்; எதிர்வர - (தன்னை) எதிர்வந்து வரவேற்க; வணங்கி - (அவர்களை) வழிபட்டு; வினையின் நீங்கிய - தவத்தால் இரு வினையில்இருந்து நீங்கியவர்களாகிய; வேதியர் - அந்த வேதியர்களுக்கு; விருந்தினன்ஆனான் -. வனம் சென்று தவம் செய்வாரினும் தயரதன் மேம்பட்டவன் என்பது காட்ட ‘மனையின் மெய்எனும் மாதவம் புரிந்தவன்’ என்றார். 37 சூரியன் மறைய, அந்தி நேரம் வருதல் கலிவிருத்தம் 2083. | மா இயல் உதயம் ஆம் துளப வானவள், மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக, கா இயல் குட வரை, கால நேமிமேல், ஏவிய திகிரிபோல், இரவி ஏகினான். |
|