அமுதனாளுக்கும் - அமுதத்தை ஒத்த சீதைக்கும்; கைகளும் கண்களும் கமலம்போன்ற - கைகளும், கண்களும் மாலைக் காலத்துத் தாமரைகள் குவிந்திருப்பது போல்குவிந்து மூடிக்கொண்டன. மாலையிற் சில மலர் குவிதலும், வேறுசில மலர்தலும் இயல்பு - வழிபாடு செய்வார் கண்களைமூடிக் கைகளைக் குவிப்பர் ஆதலின், இங்கு மாலைக்காலத்துத் தாமரை குவிந்திரப்பது போலக்கைகளும், கண்களும் ஆயின என்று குறிப்பால் அதனைப் புலப்படுத்தினர். ஏகாரம் ஈற்றசை. 42 இலக்குவன் அமைந்த குடிலில் இராமன் சீதையோடு குடிபுகுதல் 2088. | மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும், வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என, கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான். |
தவத்தின் எய்தினான் - தவம் காரணமாகக் காடு நோக்கி வந்த இராமன்; மாலைவந்து அகன்றபின் - மாலைப் பொழுது வந்து சென்ற பிறகு (இரவில்); வேலை உறைவிடம்வந்து மேயது ஆம் என - கடலானது தான் தங்கும் இடத்தை வந்து சேர்ந்தது என்று சொல்லும்படியாக; மருங்கிலாளொடும் - இடையில்லாத சீதையோடும்; கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி - அம்பை உமிழுகின்ற வில்லை உடைய தம்பியாகிய இலக்குவன்; கோலிய - செய்தமைத்த; சாலை வந்து எய்தினான் - சாலை இருக்கும் இடத்தைவந்தடைந்தான். நீலக்கடல் போன்ற நிறம் உடையவன் இராமன் ஆதலின், கடல் தன் உறைவிடம் போனதுபோல என்று உவமைப்படுத்தினார். 43 இலக்குவன் அமைத்த சாலை 2089. | நெடுங் கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து, ஒடுங்கல் இல்நெடு முகடு ஒழுக்கி, ஊழுற இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும் முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே. |
நெடுங் கழைக் குறுந்துணி நிறுவி மேல் நிரைத்து - நீண்ட மூங்கில்களின் சிறியதுண்டுகளை நிறுத்தி மேலே வரிசையாக அமைத்து; ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி-வளைதல் இல்லாத நீண்ட தூலத்தை நேராக நிறுத்தி; ஊழ் உற இடுங்கல் இல் கை ஏற்றிவிசித்து - முறையாகப் பொருந்தக் கீழே தாழ்தல் இல்லாத பக்கக் கழிகளை மேல் ஏற்றி நன்கு இறுக்கிக் கட்டி; முடங்கல் இல் வரிச்சுமேல் - வளைதல் இல்லாத அந்தக் கட்டியவரிச்சுக்களின் மேலே; எங்கணும் - எவ்விடத்தும்; விரிச்சு மூட்டி -விரித்து மூடு செய்து. |