நீளக்கழி, குறுக்குக் கழிகள், தூலம் முதலியன கூரை வேய்வதற்கு முன் கட்டப் பெறுவன. விரிச்சு - விரித்து. ஏகாரம் ஈற்றசை. 44 2090. | தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின், பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த் தூக்கிய வேய்களின் கவரும் சுற்றுறப் போக்கி, மண் எறிந்து, அவை புனலின் தீற்றியே. |
தேக்கு அடைப் படலையின் செயிவு செய்து - தேக்க இலை கொண்டு மேல் கூரையைச்செறிய மூடி; பின் - பிறகு; பூக் கிளர் நாணலின் புல் வேய்ந்து- பூத்துவிளங்கும் நாணற் புல்லை மேலே பரப்பி; கீழ்த் தூக்கிய வேய்களின் - கீழேநிறுத்தப் பெற்ற மூங்கில் கழிகளால்; சுற்றுறச் சுவரும் போக்கி - சுற்றுப்பக்கமெல்லாம் சுவரைச் செய்து; மண் எறிந்து - அதன்மேல் மண்ணை அடித்து; அவை -அச்சுவரை; புனலின் தீற்றி - தண்ணீரால் மெழுகிப் பூசி. முதலில் இலைகளை வேய்ந்து அதன் மேல் நாணற் புல்லைப் பரப்பினான் என்க. இலைகள்நாணற்புல் விழாமல் தாங்குவன. மூங்கிற் பிளாச்சுகளின் மேல் மண்பூசித் தண்ணீரால் மெழுகிச்சுற்றுச் சுவர் அமைத்தானாம். ஏகாரம் ஈற்றசை. 45 2091. | வேறு இடம், இயற்றினன் மிதிலை நாடிக்கும், கூறின நெறி முறை குயிற்றி, குங்குமச் சேறு கொண்டு அழகுறத் திருத்தி, திண் சுவர் ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே. | மிதிலை நாடிக்கும் - சீதைக்கும்; வேறும் இடம் இயற்றினன் - தனி இடத்தைச் செய்து அமைத்தான் (எவ்வாறு எனில்); கூறின நெறி முறை குயிற்றி - மேலே சொன்ன முறைப்படி செய்து அதன்மேல்; குங்குமச் சேறு கொண்டு அழகுறத் திருத்தி - குங்குமக் குழம்பைக் கொண்டு அழகாகச் சுவர்களை ஒழுங்கு செய்து; திண்சுவர் - வலிய சுவரிலே; ஆறு இடு மணியொடு தரளம அப்பி - ஆற்றிலிருந்து கிடைத்த மணிக்கற்களோடு முத்துகளையும் பொருத்தி. பிராட்டியின் தனி இடத்தைக் குங்குமக் குழம்பால் பூசி, மணியும் முத்தும் சுவர்களிலே அப்பி அழகு செய்தமை கூறினார், ஏகாரம் ஈற்றசை. 46 2092. | மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து, அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து, எயில் இளங் கழைகளால் இயற்றி, ஆறு இடு செயலுடைப் புது மலர் பொற்பச் சிந்தியே. |
|