பக்கம் எண் :

470அயோத்தியா காண்டம்

     இருவரும் ஒன்றாக வசிட்டர் பால் பயிலுதலின் இக்குடிசை அமைக்கும்
கலையை என்று கற்றாய்?என்று இலக்குவனைப் பார்த்து  மனம் நெகிழ்ந்து
கூறினான் என்க.                                              51

2097. ‘அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்,
படரும் நல் அறம் பாலித்து, இரவியின்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் என்பது என்?
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள்’ என்றான்.

     ‘அடரும் செல்வம் அளித்தவன் - நெருங்கிய அரசச் செல்வத்தை
எனக்குஅளித்தவனாகிய தயரதனது; ஆணையால்- கட்டளையால்; படரும்
நல் அறம் பாலித்து -
மேலும் மேலும் பரவிச் சென்று பிறவிதோறும்
விளைவதாகிய நல்ல தருமத்தைப் பாதுகாத்து (வனம்புகுத்து);  இரவியின்
சுடரும் -
சூரியனைப் போல ஒளிவீசி விளங்கும்; மெய்ப் புகழ்-
உண்மையான புகழை; சூடினென் என்பது என்?- நான் மேற்கொண்டேன்
என்பதனால் யாது பயன்?; உனக்கு-; நெடுநாள் இடர் இழைத்தேன் -
பல நாள் துன்பத்தைச் செய்தேன்;  என்றான் -  என்று  மனம் வருந்திக்
கூறினான்.

     ‘தயரனது சத்தியவாக்கைக் காப்பாற்ற வனம் புகுந்து  புகழ் சூடினேன்
ஆயினும், ஒரு பாவமும்அறியாத தம்பியான உனக்கு வனத்தில் என்னோடு
அலைவதாகிய துன்பத்தை நெடுநாளாக இழைத்துள்ளேனே’என்று  இராமன்
இரங்கியதாகக் கொள்க. பிறருக்குத் துன்பம் செய்து தனக்குப் புகழ் உண்டாக
நடப்பது  அறநெறி ஆகுமா என்றான் இராமன்.                     52

இலக்குவன் மறுமொழி  

2098.அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்.
‘எந்தை! காண்டி, இடரினுக்கு அங்குரம்
முந்து வந்து முளைத்தது அன்றோ’ என்றான்

     ஐயன் - இராமன்; அந்த வாய்மொழி இயம்பலும் - அந்த உள்ளம்
கலந்தசொற்களைக் கூறிய அளவில்;  நொந்த சிந்தை இளையவன்
நோக்கினான் -
வருந்தியமனத்தை  உடைய இலக்குவன் (அச்சொற்களின்
பொருளை) மனத்தின் கருதி;  ‘எந்தை! -என் தந்தை போல்பவனே?;
காண்டி - நான் சொல்வதை ஆராய்ந்து பார்ப்பாயாக; இடரினுக்கு - உன்
துன்பத்துக்கு; அங்குரம் - முளையானது; முந்தி வந்து முளைத்தது
அன்றோ’
- நீ மூத்தவனாகப் பிறந்து தோன்றியதனால் உண்டாகியதல்லவா?
என்றான்- என்று வருந்திக் கூறினான்.