10. பள்ளிபடைப் படலம் தயரத மன்னனை ஈமப் பள்ளியில் சேர்த்த செய்தியைக் கூறுவது ஆதலின் பள்ளிபடைப்படலம் எனப்பெற்றது. பள்ளி என்பது ஈமப்பள்ளி ஆகும். கல்வெட்டுகளில் இது ‘பள்ளிபடை’என வருகின்றது. வசிட்ட முனிவனால் அனுப்பப் பெற்ற, இராமன் முடிசூட்டு விழாச் செய்தியைத் தாங்கியதூதர் பரதன் தங்கியுள்ள கேகய நாட்டை அடைந்தனர். ஒலையைக் கொடுத்தனர். அது கண்ட பரதன்மகிழ்ந்து கோசல நாடு அடைகின்றான். அவலத்தில் ஆட்பட்டுப் பொலிவழிந்த கோசல நாட்டையும்அயோத்தியையும் கண்டு திகைக்கின்றான். கைகேயி மூலமாக நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து மனங் கலங்குகிறான்; தாயைவெறுக்கின்றான்; தன்னையே நொந்துகொள்கிறான்; கோசலை திருவடியில் பணிகிறான். வசிட்ட முனிவனால் தன்னைத் தந்தை ‘மகனல்லன்’ என நீக்கியது அறிந்து மனம் மாழ்கிறான். முனிவன்கருத்துப்படி சத்ருக்கனனால் தந்தைக்குரிய ஈமக்கடன்களை நிறைவேற்றுகிறான். பத்து நாள் கிரியைகள் முற்றிய பின்னர் முனிவனும் பிறரும் மந்திரக் கிழவரும் மன்னரின்றி நாடு இருத்தல் தகாது என்று கருதிப் பரதனிடம் வந்து கூடுகின்றார்கள் என்பதுவரைஉள்ள செய்திகள் இப்படலத்திற் கூறப்பெறுகின்றன. தூதுவர் பரதனிடம் தம் வருகையை அறிவித்தல் கலிவிருத்தம் 2102. | பொரு இல் தூதுவர் போயினர், பொய் இலார்; இரவும் நன் பகலும் கடிது ஏகினார்; பரதன் கோயில் உற்றார், ‘படிகாரிர்! எம் வரவு சொல்லுதிர் மன்னவற்கே!’ என்றார். |
பொற் இலார், பொரு இல் தூதுவர் - உண்மை உள்ளவர்களும் தமக்கு வேறு ஒப்புஇல்லாதவர்களும் ஆகிய தூதர்; போயினர் - (அயோத்தியிலிருந்து) சென்றார்கள்; இரவும் நன்பகலும் - இரவிலும் |