பக்கம் எண் :

478அயோத்தியா காண்டம்

பரதன் சத்ருக்கனனோடு போதல்  

2109.‘எழுக சேனை’ என்று ஏவினன்; எய்தினன்
தொழுது, கேகயர் கோமகன் சொல்லொடும்,
தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்.

     (உடனே பரதன்) எய்தினன்- அரண்மனையை அடைந்து; ‘எழுக’
என்று ஏவினன்
- (தன்னுடன்வந்த) சேனைகள் அயோத்திக்குப் புறப்படுக
என்று கட்டளை இட்டு; கேகயர் கோமகன் தொழுது-கேகய
தேசத்தரசனும்  தன் பாட்டனும் ஆகிய யுதாசித்தை வணங்கி;
சொல்லொடும்- அவன்சொல்லிய செய்தியுடனே; தம்பியொடு-
தம்பியாகிய  சத்ருக்கனனோடு; தழுவு தேரிடை -குதிரைகள் பூட்டப் பெற்ற
தேரிடத்தில்;  நாளும் பொழுதும் குறித்திலன்- புறப்பட வேண்டியநல்ல
நாளையும், நல்ல நேரத்தையும் பற்றிச் சித்தியாது; ஏறினான் போயினான்-
ஏறிச் சென்றான்.

     இராமனைக் காண்பதில் உள்ள பேரார்வம் உள்ளே உந்துகின்ற
படியால் உடனே புறப்பட்டான் என்க. கைகேயியின் தந்தை கேகயர்
கோமகனாகிய ‘யுதாசித்து’ என்பான். அவன் அயோத்தியில் உள்ள மருமகன்
மகள் முதலியோரை விசாரித்து அனுப்பிய செய்தி ‘சொல்’ எனப்பெற்றது.
‘தம்பியொடு’ என்பது ‘கைப்பொருளொடு’ சென்றான் என்புழிப் போலத்
தனக்கோர் முதன்மையில் வழி வந்தது ‘ஓடு ’ உருபு எனக் கொள்க. ‘நாளும்
பொழுதும்’ என்பது மாறிநின்றது. நாள் என்பது விண்மீன் வழியும், பொழுது
என்பது ஒரு நாளின் அறுபது நாழிகையும் ஓரை வழியும் நிகழும் காலம்
என்க. தெய்வத்தைக் காணலுறுவார் நாள் பொழுது குறியார்; இராமன்
பரதனுக்குத் தெய்வமாதலின் இவனும் அவ்வாறு புறப்பட்டான். பின்னர்ப்
பொழுதும் நாளும் இவனுக்கு அயோதியில் தீய செய்தியை அறிவி்க்கும்
நிமித்தம் ஆயின என்பது குறிப்பாதலின் இங்கே குறித்திலன் என்பது தீய
நாளிலும் தீய பொழுதிலும் அவன் எண்ணாமலே புறப்பட்டான் என்பது
பொருள்.                                                 8

பரதனோடு சென்ற சேனையின் எழுச்சி  

2110.யானை சுற்றின; தேர் இரைத்து ஈண்டின;
மான வேந்தர் குழுவினர்; வாளுடைத்
தானை சூழ்ந்தன; சங்கம் முரன்றன;
மீன வேலையின் விம்மின, பேரியே.

     (பரதன் சென்ற போது) யானை சுற்றின- யானைகள் சூழ்ந்து
சென்றன; தேர் இரைத்துஈண்டின- தேர்கள் மணி ஒலித்து நெருங்கிச்
சென்றன; மான வேந்தர் குழுமினர்- பெருமையுடைய அரசர்கள் திரண்டு
சென்றனர்; வாள் உடைத் தானை சூழ்ந்தன- வாள் முதலிய கருவிகளை
ஏந்தியசேனா வீரர்கள் சுற்றிச் சென்றனர்;சங்கம் முரன்றன-