உவகையொடுங் கொடுத்தல். நல்லவர்ப் பேணும் நன்மை - இரண்டன் தொகை. 80 1394. | ‘ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர் பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும், கார் மழை பொழியவும், கழனி பாய் நதி வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.? |
‘ஊருணி நிறையவும் - ஊராரால் உண்ணுதற்குரிய நீர்நிலை நீரால் நிறையவும்; உதவும் மாடு உயர் - பலர்க்கும் உதவத்தக்க இடத்தில் வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம்- உலகத்தார் விழையும் பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் - பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் - மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி -வயல்களில் பாய்கிற ஆறு; வார்புனல் பெருகவும் - மிக்க நீர் பெருகவும்; மறுக்கின்றார்கள்யார் - வேண்டாம் என்று தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).’ இவ்வெடுத்துக்காட்டுகளால் இராமன் பிறர்க்கு நன்மை செய்யும் ஒப்புரவாளன் என்பது தெரிவிக்கப்பட்டது.“ ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் குறளில் (215) வரும் உவமையினை ஊருணி நிறையவும் என்றும், “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம், நயனுடையான்கண்படின்” (216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகை யான்கண் படின்“(217) என்னும் குறட்பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழுபயன்மரம்” என்றும் சுருங்கச் சொல்லியுள்ள திறம் எண்ணி மகிழ்தற்குரியது. 81 1395. | ‘பனை அவாம் நெடுங் கரப் பரும யானையாய்! நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன்னுயிர்க்கு, எனையவாறு அன்பினன் இராமன், ஈண்டு, அவற்கு அனையவாறு அன்பின அவையும்’ என்றனர். |
‘பனை அவாம் நெடுங் கரப் பரும யானையாய் - பனை மரம் போன்ற நீண்ட துதிக்கையையும்,அம்பாரியையும் உடைய யானையை உடைய அரசே!; நினை அவாம் தன்மையை நிமிர்ந்த - உன்னை விரும்பும் தன்மையை மிகுதியாகக் கொண்டிருந்த; மன் உயிர்க்கு - நிலைபேறுடைய உயிர்களிடத்தில்; ஈண்டு இராமன் எனையவாறு அன்பினன் - இங்கே இராமன் எவ்வாறு அன்புடையவனாய் இருக்கின்றானோ; அனையவாறு அவையும் அவற்கு அன்பின - அவ்வாறு அவ்வுயிர்களும் அவனிடத்தில்அன்புடையனவாய் இருக்கின்றன; என்றனர் - என்று கூறினர். இராமன் மக்களிடத்தும், மக்கள் அவனிடத்தும் காட்டிய அன்புத்திறன் இங்குச் குறிக்கப்பட்டது.பாலகாண்டத்துள் 308 - 312 ஆத்ம பாடல்களில் இத்தன்மை |