வணங்கி; பொன்னின் வார்சடைப் புனிதனோடும் போய்- பொன்னொத்த சிவந்த நீண்டசடையினை உடைய தூய மாமுனிவனாகிய வசிட்டனோடும் சென்று; தன்னை நல்கி அத் தருமம்நல்கினான்- தன்னை (தன் உயிரை) அர்ப்பணித்து அந்தத் தருமத்தைக் காப்பாற்றியதயரதனது; பன்னு - (பலராலும்) பல முறை பாராட்டப் பெறுகின்ற; தொல் அறப்படிவம் - பழமையான அறத்தின் திருவுருவத்தை; நோக்கினான் - பார்த்தான். செம்பொன்போலச் சிவந்திருத்தலின் ‘பொன்சடை’ என்றார். ‘தன் உயிர் தந்து தருமம்காத்தவன்’ தயரதன் என்பதனைப் பின்வரும் “வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவள்ளல்” என வரும் (4018) வாலி கூற்றானும் தெளிக. தைலக் கடாரத்துள் இடப்பட்டிருந்த மேனியைஎடுத்துக் கட்டிலிற் கிடந்தப் பரதன் கண்டனன் என்க. 123 பரதன் தந்தையின் திருமேனி கண்டு புலம்பல் 2225. | மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான், அண்ணல், ஆழியான், அவனி காவலான், எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை, கண்ண நீரினால் கழுவி ஆட்டினான். |
(பரதன் ) மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் - பூமியின் மேலே விழுந்துபுலம்பி மயங்குபவனாகி; அண்ணல் - பெருமை பொருந்திய; ஆழியான் -ஆணைச்சக்கரத்தை உடைய; அவனி காவலன் - உலக வேந்தனாய தயரதனது; எண்ணெய் உண்ட -தைலத்திற் கிடந்த; பொன் எழில் கொள் மேனியை - பொன் மயமான அழகு கொண்ட திருமேனியை; கண்ண நீரினால் - (தன்) கண்களிலிந்து பெருக்கெடுத்து வரும் கண்ணீரினால்; கழுவி - தூய்மை செய்து; ஆட்டினான்- மூழ்கச் செய்தான். எண்ணெயில் மூழ்கிக் கிடந்த மேனி இப்போது பரதன் கண்ணீரில் மூழ்கியது என நயம்காண்க. எண்ணெயாட்டியதால் மேனி பொன்னிறம் பெற்றது என்பது வான்மீகத்திற் கண்டது. 124 தயரதன் உடலை விமானத்தில் வைத்து, யானைமேல் கொண்டு செல்லுதல் 2226. | பற்றி, அவ்வயின் பரிவின் வாங்கினார், சுற்றும் நான்மறைத் துறை செய் கேள்வியார்; கொள்ள மண்கணை குமுற, மன்னனை, மற்று ஓர் பொன்னின் மா மானம் எற்றினார். |
நான் மறைத்துறை செய் கேள்வியார்- நான்கு வேதங்களின் துறைகளிலும் பரந்து சென்ற கேள்வியறிவினை உடையவராய அந்தணர்; |